பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 53                                                                                           இதழ் -
நாள் : 30-04-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩    
 
    
 
வினையாலணையும் பெயர்

    வினைமுற்றானது பெயர்ச்சொல்லின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்கத்தக்கதாக இருப்பின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். வினையோடு அணைந்து வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.

“வினையின் பெயரே படர்க்கை வினையால்
அணையும் பெயரே யாண்டுமாகும்.”    
(நன்னூல் நூற்பா எண்.  286)

வினையாலணையும் பெயரானது உயர்திணையாகவும் இருக்கும். அஃறிணையாகவும் இருக்கும். 

மேலும் இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் வரும்.

சான்று        

வந்தவர், ஆய்ந்தவர், பொறுத்தவர்.
வினையாலணையும் பெயர்  - திணை

கற்றோர் கூறுவர்.
கற்றோர் என்பது உயர்திணை வினையாலணையும் பெயர்.

பறந்தவை விழுந்தன.
பறந்தவை என்பது அஃறிணைப் பன்மை வினையாலணையும் பெயர்.
வினையாலணையும் பெயர்   -  இடம்

தன்மை  -  (பாடினேனை – பாடிய என்னை)
இனிமையாகப் பாடினேனைப் பாராட்டினார்.

முன்னிலை  -  (பாடுகின்றாயை  - பாடுகின்ற உன்னை)
இனிமையாகப் பாடுகின்றாயைப் பாராட்டுகிறார்.

படர்க்கை  -  (பாடுவானை - பாடுபவனை)
இனிமையாகப் பாடுவானைப் பாராட்டுவர்.

 
     இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment