பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 28                                                            இதழ் - ௨௮
நாள் : 05-11-2022                                               நாள் : 0 - ௧௧ - ௨௦௨௨

 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்

தோட்டம்

     ஊற்றுநீரை இறைத்துத் தோட்டப் பயிர் செய்யும் வழக்கம் மருத நிலத்தில் காணப்படுகிறது. தோட்டம், கொல்லை, கிளார் என்பன ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களாகும். தஞ்சை நாட்டில் பூந்தோட்டமும், தென்னாற்காட்டில் இலஞ்சிக் கொல்லையும், கருப்பக்கிளாரும் உள்ளன. இவை மருதநிலத்திலுள்ள தோட்டத்தின் அடிப்படையில் தோன்றியவை.

நல்லூர் 

     தமிழ்நாட்டு மருதநிலத்திலமைந்த ஊர்களும் சிலவற்றை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரமூர்த்திநாயனாரைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ளார். சைவ சமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்து பேறு பெற்ற நல்லூரும் இவ்வூரே ஆகும்.

     கும்பகோணத்து பக்கத்தில் நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர்நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப்பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங்கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய்நல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. வடஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய்நல்லூர் சேனூர் என்று அழைக்கப்படுகிறது.

     தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் பலர் தம் பெயர் விளங்குமாறு பல நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டிய நாட்டில் வீரபாண்டிய நல்லூர், அரிகேசரி நல்லூர், மானாபரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த பெயரால் பெயர்பெற்றன. பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச் சாசனங்களிற் காணலாம். முடி நல்லூர், அநபாய நல்லூர், திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சேகரகலி சோழ நல்லூர் முதலிய நல்லூர்கள் மன்னருடைய விருதுப்பெயர் பெற்ற ஊர்களாகும். அதேபோல் கொங்குநாட்டிலுள்ள தென்னமநல்லூர், சிங்கநல்லூர் முதலிய ஊர்ப் பெயர்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

 

(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில்)

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment