பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 87                                                                                                      இதழ் - 
நாள் : 24-12-2023                                                                                       நாள் : --௨௦௨௩

 
குற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரப் புணர்ச்சி
  • குற்றியலுகரத்தில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும் போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
     “உயிர்வரின் உக்குறள் மெய்விட்  டோடும்
     யவ்வரின் இய்யாம் முற்றுமற்  றொரோவழி”
                            - நன்னூல், நூ.எண். 164
சான்று
  • அமுது + என்று = அமுதென்று 
  • அமுது(த்+உ)+என்று=அமுத்+என்று (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதிப்படி  ‘உ’ நீங்கியது)
  • அமுதென்று  (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - த் + எ = தெ)
    நிலைமொழி இறுதி மெய்யெழுத்தாகிய ‘த்’ வருமொழியின் முதல் எழுத்தாகிய ‘எ’ என்ற உயிரெழுத்தோடு இணைந்து புணர்ந்தது. வருமொழியிலுள்ள உயிர் எழுத்து நின்ற மெய்யுடன் இணையும் – அமுதென்று ஆயிற்று.

    குற்றியலிகரப் புணர்ச்சி
    • நிலை மொழியின் ஈறு குற்றியலுகரமாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து, யகரமாக இருந்து புணரும்போது, உகரம் இகரமாகத் திரியும்.
    சான்று
    • குரங்கு+யாது=குரங்(க்+உ) + யாது = குரங்கி (க்+இ) + யாது = குரங்கியாது.

    முற்றியலுகரப் புணர்ச்சி
    • நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
    சான்று
    • வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
    • வரவு (வ் +உ) + அறிந்தான் - 'முற்றும் அற்று ஒரோவழி ' என்னும் விதிப்படி 'உ' மறைந்தது.
    • வரவ் + அறிந்தான் - 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி 'வரவறிந்தான்' எனப் புணர்ந்தது.

    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...

     
    திருமதி. தி.செ. மகேஸ்வரி
    தமிழாசிரியர்
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
    சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
    கோயம்புத்தூர்-641020

    No comments:

    Post a Comment