பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - ஒளவை

இதழ் - 125                                                                                            இதழ் - ௧௨
நாள் : 15- 09 - 2024                                                                           நாள் : ௧ - ௦ - ௨௦௨௪


ஔவை ( கி.பி. 9 )

( விநாயகர் அகவல் )

     விநாயகர் அகவல் பாடிய ஔவை பற்றிய செய்திகளை ஏற்கனவே அறிந்து கொண்டோம்.விநாயகர் அகவல் மூலமாக நாம் அறிந்தவை பற்றிப் பார்க்கலாம். 

     அகவல் என்றால் கூப்பிடுதல் அதாவது அழைத்தால் எனப் பொருள் தரும்.  அதேவேளை, அகவல் என்பது மயிலின்  ஒலியினைக் குறிப்பதாகும். ஆசிரியப்பா அல்லது அகவற்பாவினால் அமைந்த விநாயகர் அகவல்  72 அடிகளைக் கொண்டது.   "சீதக்களபச் செந்தாமரைப்பூம்..." எனத் தொடங்கும் விநாயகர் அகவல் மூலம் ஔவை, பிள்ளையாரது உருவத்தினை அறியத் தருகிறார்.

     யானையின் முகத்தினை உடையவர்; ஒளி வீசுகின்ற செம்மை வண்ணப் பொட்டை  வைத்திருப்பவர்;  ஐந்து கைகளை  உடையவர்;  நீல நிறமான  இவர் தொங்குகின்ற வாயை அதாவது தும்பிக்கையை  உடையவர்; எட்டுத் தோள்களும் மூன்று கண்களும் உடைய இவர், முக்கனிகளை விரும்பி உண்ணுபவர்; பெருச்சாளியைத் தனது வாகனமாகக் கொண்டவர் என ஔவை அழகுத்  தமிழில் பாடியுள்ளார் .

     அதுமட்டுமின்றி, ஐம்புலன்களை அடக்கியாளும் வித்தையைக் கூறுகிறார். இவர் மனித உடலில் உள்ள ஒன்பது வாயில்களைக் காப்பது பற்றியும் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றியும் அத்தோடு நாடி சுத்தியையும் (மூச்சுப் பயிற்சி) குண்டலினி சக்தி பற்றியும் கதிரவனது இயக்கத்தினையும் சந்திரனது கலைகளையும் பதிவு செய்துள்ளார்.

     மேலும், 'அறியாமையாகிய இருளுக்கும் அறிவாகிய வெளிச்சத்திற்கும் பிறப்பிடம் ஒன்று'  என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறார். சொற்களால் விவரிக்க முடியாத அறிவு என்னும் அற்புதத்தை அளவின்றி அருள்பவர் விநாயகர் என்கிறார். அதுமட்டுமின்றி எண்ணிய காரியம் ஈடேற வேண்டுமெனில் இந்த விநாயகர் அகவலைப் படியுங்கள். நினைத்த காரியம் நிறைவேறும் என உறுதி கூறுகிறார்.

     விநாயகர் அகவலைப் படிக்கும் போது, ஔவை எடுத்தாண்டுள்ள சொற்கள் சுவைக்கக்கூடியதாக இருக்கிறது. பக்தி என்ற ஒன்றினைப்பற்றி இருப்பவர்கள் படிக்கும்போது அது வேறு சுவையைக் கொடுக்கிறது. 





( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment