இதழ் - 169 இதழ் - ௧௬௯
நாள் : 10 - 08 - 2025 நாள் : ௧0 - ௦௮ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
தேவைக்கேற்ற ஊதியமும் திருமண பந்தமும்
பெரியசாமித் தூரன் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மாதம் இருபத்தைந்து ரூபாய் ஊதியத்திற்குப் பதிலாக பதினைந்து ரூபாயே போதுமானது என்றும் சொல்லி தேவைக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு ஆசிரியராகத் தொண்டாற்றினார்.
வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பெரியசாமித் தூரனின் தொண்டுள்ளத்தையும் பயனெண்ணாச் செயல்பாடுகளையும் இத்தனை ஆண்டுகளாக் கண்டுவந்த அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் அப்பள்ளிக்கு தலைமையாசிரியராக தூரன் அவர்களே இருக்க வேண்டும் என்பது விரும்பினார்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்டதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கும்விதமாக பி.ஏ. பட்டப்படிப்புத் தேர்வை தூரன் அவர்கள் புறக்கணித்திருந்தார். அதன்பிறகு வித்யாலயத் தொண்டில் மூழ்கிப் போனார். தேர்வை எழுதும் எண்ணமே அவருக்கு வரவில்லை. இப்பொழுது ஐயா அவர்களின் விருப்பிற்கிணங்க பி.ஏ. தேர்வுடன் தலையாசிரியாக இருப்பதற்குரிய எல்.டி. தேர்வையும் எழுதித் தேர்ச்சியடைந்தார். வித்யாலயத்தில் படிப்புக்காகக் கடன்பெற்றுதான் தேர்வுக்குத் தயாரானார்.
தூரன் அவர்கள் தலைமையாசிரியர் ஆவதற்குரிய கல்வி, நிர்வாகத் தகுதிகளைப் பெற்றார். அன்று தலைமையாசிரியராக பதவியில் அமர்பவருக்கு தொடக்க ஊதியம் மாதம் நூற்றிருபது ரூபாய். ஆனால் தமிழாசிரியராக இருந்தபொழுது செய்ததைப் போலவே ஊதியத்தைக் குறைத்து அறுபது ரூபாயாகப் பெற்றுக் கொண்டு தலையாசிரியராப் பணிசெய்தார்.
இக்காலத்தில் தூரன் அவர்களுக்கு காளியம்மாள் என்பவருடன் திருமணம் செவ்வனே நடைபெற்றது. இதுகாறும் தனது ஊதியத்தைக் குறைத்து தேவைக்கேற்ப பெற்றுவந்தவருக்கு திருமணம் சில சமூகக் கடமைகளை முன்னிறுத்த இப்பொழுது பெற்றுவருவதைக் காட்டிலும் அதிக பணம் தேவைப்பட்டது. ஐயா அவர்களிடம் சென்று மாதம் எழுபத்தைந்து ரூபாய் ஊதியமாகத் தருமாறு கோரினார். உடனடியாக எழுபத்தைந்து ரூபாய் கோருவதற்கு ஈடுசெய்யும் வகையில் சம்பள உயர்வு கொடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஐயா அவர்களும் எழுபத்தைந்து ரூபாயைக் கொடுக்க முன்வந்தார். ஆனால் சற்று வருத்தத்துடன் இது நடந்தது என்கிறார் தூரன். அவரது சொற்களிலேயே இதனைக் காண்பது பொருந்தும்.
“அய்யா அவர்கள் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால் வித்யாலயத்திற்கு யாதொரு நட்டமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளாமல், திருமணம் ஆனவுடன் பண ஆசை வந்துவிட்டது என்று மட்டும் கூறிவிட்டு எழுபத்தைந்து ரூபாய் கொடுக்க முன்வந்தார்கள். நான் சரியாகப் புரிந்துகொள்ளும்படி செய்யத் தவறிவிட்டேனா என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் மௌனமாக இருந்துவிட்டேன்.”
“இப்படியாக சுமார் ஐந்து ஆண்டுகள் ஓடின…. எனது அய்யா அவர்கள் மீது குறைகூற முடியாது. அவர் பிரம்மச்சாரி. அன்றும் இன்றும் என்றும் பிரம்மச்சாரி. உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ வேண்டும் என்று விரும்பியவர். அவர் அவ்வாறு மற்றவர்களையும் எதிர்பார்ப்பது நியாயம். அன்று சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டம் எய்தியிருந்தது. நாடு ஆயிரம் ஆயிரம் தியாகிகளை எதிர்பார்த்திருந்தது. சம்பள வருவாயில் தியாகம் செய்வது பெரிதல்ல. அய்யா அவர்களின் மீது குறைவாகப் பேசுவது சரியல்ல என்பது எனக்கே தெளிவாகத் தெரிந்ததாகும். பின்னால் அவர் அன்பு காட்டியதற்கு எத்தனையோ சமய சந்தர்ப்பங்கள் உண்டு.”
திருமணமாகி செலவு அதிகமானதால் ஊதிய உயர்வை நிறுத்திக் கொண்டு உடனடி ஊதியமாக எழுபத்தைந்து ரூபாயைக் கோரியதால் ஐயா அவர்கள் சற்று வருத்தப்பட்டார் என்று கூறிய தூரன் அவர்கள் அதையும் தான் சரியாக விளங்கச் செய்யாமல் போனேனோ என்று தன்மீது குறைசொல்லிக் கொள்வது அவரது கனிவையும் பணிவையும் காட்டுகிறது. தலைமையாசிரியராக இருந்த தூரன் அவர்களின் தொண்டு வித்யாலய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment