இதழ் - 128 இதழ் - ௧௨௮
நாள் : 06- 10 - 2024 நாள் : ௦௬ - ௧௦ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
ஔவைக்கும் கம்பனுக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கும். எளிமையே வடிவான ஔவை கம்பனின் புலமைச் செருக்கினை எதிர்த்தார். ஒருநாள் அரசவையில், ஔவையைப் பார்த்து கம்பர்,
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ"
என்று சிலேடையாக ஒரு தொடரடியைப் பாடி நிறுத்தினார்.
”அடி" என ஔவையைக் கூறுகிறார். ஆனால் மற்றவர்களுக்கு ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகள் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும்.
கம்பரது உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டார் ஔவை. தன்னை ”அடி” என்று சொல்கிறாயா? நானும் பதிலடி கொடுக்கிறேன் என்று...
" எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது "
எனப்பாடி முடித்தார்.
அதாவது,
"எட்டேகால் லட்சணமே"
தமிழில் எட்டு என்பதன் குறியீடு "அ"; கால் என்பதன் குறியீடு "வ";
எனவே இதன் பொருள் "அவலட்சணமே"
"எமனேறும் பரியே"
இங்கே பரி என்பது வாகனத்தைக் குறிக்கிறது. அதாவது எமனின் வாகனம் எருமை. எனவே இது "எருமையே" என்றாகிறது
"மட்டில் பெரியம்மை வாகனமே"
பெரியம்மை என்பது சீதேவியின் தமக்கையான மூதேவியைக் குறிக்கிறது. அவரது வாகனம் கழுதை. எனவே "கழுதையே"
"முட்டமேற் கூரையில்லா வீடே"
தலை முட்டுமாறு மேலே கூரை இல்லாத வீடு.
அதாவது "குட்டிச்சுவரே"”
"குலராமன் தூதுவனே"
இராமபிரானுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அனுமன்.
அதாவது "குரங்கே"
"ஆரையடா சொன்னாய்"
நீ சொன்னது "ஆரைக்கீரையை",
யாரைப்பார்த்தடா கேட்டாய்? என்றும் பொருள் கொள்ளலாம். ஆரைக்கீரையை தற்போது அரைக்கீரை என்கிறோம்.
"அடி" என தன்னை விளித்த கம்பரை "அடா" என அழைத்துப் பதிலடி கொடுத்த ஔவயின் தமிழ் அழகு.
எனவே, எவரையும் மரியாதைக் குறைவாகப் பேசக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment