இதழ் - 179 இதழ் - ௧௭௯
நாள் : 19 - 09 - 2025 நாள் : ௧௯ - ௧௦ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
திருவாலங்காடு
தொண்டை நாட்டுப் பழம் பதிகளுள் ஒன்று திரு ஆலங்காடு. அது பழையனூரை அடுத்திருத்தலால் பழையனூர் ஆலங்காடு என்று தேவாரத்தில் குறிக்க பெற்றுள்ளது. அது தொண்டை நாட்டு மணவில் கோட்டத்தில் அமைந்த ஊர் என்று சாசனம் கூறுகின்றது. மூவர் பாடல் பெற்ற அம்மூதூர் காரைக்கால் அம்மையார் சிவப்பேறு பெற்ற பெருமையும் உடையதாகும்.
பனங்காடு
பழங்காலத்தில் தொண்டை மண்டலத்துக் கலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கழுமல நாட்டில் பனங்காடு என்னும் பதி அமைந்திருந்த தென்று சாசனம் கூறுகின்றது. பனங்காட்டின் இடையே பரமன் கோயில் கொண்டமையால் பனங்காட்டூர் என்பது அவ்வூரின் பெயராயிற்று. அப் பதியில் அமர்ந்த பெருமானை,
"பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே"
என்று சுந்தரர் பாடியுள்ளார்.
இக்காலத்தில் வட ஆர்க்காட்டுச் செய்யார் வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment