பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 13                                          இதழ் - ௧௩

நாள் : 24-07-2022                                  நாள் : ௨௪-௦௭ - ௨௦௨௨
 
   
 
குறுக்கம்
     ஓரெழுத்து  தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது குறுக்கம் எனப்படும்.

     “தற்சுட்டள பொழி ஐமூவழியும்
      நையும்  ஔவும் முதல் அற்றாகும்” 
                         ( நன்னூல் நூற்பா எண். 95 )

வகைகள்
குறுக்கம் நான்கு வகைப்படும்.
அவை,
  1. ஐகாரக் குறுக்கம்
  2. ஒளகாரக் குறுக்கம்
  3. மகரக் குறுக்கம்
  4. ஆய்தக் குறுக்கம்

1. ஐகாரக் குறுக்கம்

     ‘ஐ’ என்னும் எழுத்தானது தன்னைக் குறித்து வரும்பொழுது நெடிலுக்குரிய இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும். அப்போது குறுகி  ஒலிப்பதில்லை. ஆனால் வார்த்தையின் முதல், இடை, கடை என்னும் மூவிடங்களிலும் வரும்பொழுது ஒரு மாத்திரை அளவு குறுகி ஒலிக்கும். இதுவே ஐகாரக் குறுக்கம் ஆகும்.

சான்று
     முதல்   -  ஐவர்,  ஐந்து
     இடை   -  தலைவன், கலையரங்கம்
     கடை   -  குவளை, மழலை

     இவ்வாறு ஐகாரம் மொழிக்கு மூவிடங்களிலும் வரும். அவ்வாறு சொற்களில் வரும் ஐகாரம் குறுகி ஒலிக்கும். மொழிக்கு முதலில் உள்ள ஐகாரத்தைவிட இடையிலும் இறுதியிலும் உள்ள ஐகாரங்கள் மேலும் குறுகி ஒலிக்கும். எனவே சொல்லின் முதலில் வரும் ஐகாரம் ஒன்றரை மாத்திரை அளவாகவும் இடையிலும், இறுதியிலும் வரும் ஐகாரம் ஒரு மாத்திரை அளவாகவும் ஒலிக்கும்.

2. ஔகாரக் குறுக்கம்

     ஔகாரமும் ஐகாரத்தைப் போலவே தன்னைக் குறித்து வரும் பொழுது இரண்டு மாத்திரை அளவே ஒலிக்கும். ஔகாரம் சொல்லுக்கு முதலில் வரும் பொழுது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும். இடையிலும் இறுதியிலும் வராது. இவ்வாறு குறுகி ஒலிப்பதற்கு ஔகாரக் குறுக்கம் என்று பெயர்.

சான்று
     ஔவை,  ஔடதம்
 
 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
 
 
 
 
 
 

No comments:

Post a Comment