இதழ் - 172 இதழ் - ௧௭௨
நாள் : 31 - 08 - 2025 நாள் : ௩௧- ௦௮ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
வித்யாலய வழிபாடு
பெரியசாமித் தூரன் அவர்கள் வித்யாலயத்தின் பல்வேறு நடைமுறைகளை தனது நினைவுக் குறிப்புகளில் அளித்துள்ளார். அவற்றின் வழியாக வித்யாலயத்தின் மரபு, பழக்கவழக்கங்கள், ஆசிரிய - மாணவர் உறவு, மாணாக்கர் இயல்பு, அன்றைய காலகட்டத்தின் தேவை, போக்கு, கட்டுப்பாடுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. எனவே அவரது குறிப்புகள் வித்யாலய வரலாற்றை எழுதுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. இவை மட்டுமன்றி வித்யாலயத்தோடு தொடர்புடைய பல்வேறு ஆளுமைகள் பற்றிய சுவையான செய்திகளும் கிடைக்கின்றன.
பெரியசாமித் துரன் அவர்களின் குறிப்புகளின்படி வித்யாலயம் தனக்கெனச் சில தனித்துவமான நடைமுறைகளைக் கொண்டிருந்ததை அறியலாம். அந்நடைமுறைகள் குறித்த பெருமையுணைர்வும் அவருக்கு இருந்துள்ளது. வித்யாலய மாணவர்கள், ஊழியர்களின் உள்ளத்தில் வித்யாலயம் அழிக்க இயலாத நல்ல மரபுகளை ஊன்றி வளர்த்துள்ளது என்பது அவர் கருத்து. சான்றாக வித்யாலய கூட்டு வழிபாட்டு முறையைக் குறித்து பெரியசாமித் துரன் தரும் குறிப்பினைச் சொல்லலாம்.
வித்யாலயத்தில் நடைபெறும் கூட்டுவழிபாட்டு முறை வித்யாலயத்திற்கே உரிய வழிபாட்டு முறையாகும். குருகுலமாகச் செயல்பட்டு வந்த இடத்தில் இத்தகைய முறைமைகள் நல்ல பலன்களை அளிக்க வல்லது என்கிறார் தூரன். அது என்ன வித்யாலய கூட்டு வழிபாட்டு முறை? காலை 5 மணிக்குள் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அனைவரும் வழிபாட்டுக் கூடத்தில் கூட வேண்டும். சுவாமி விவேகானந்தர் தனது குருநாதரான ஸ்ரீராமகிருஷ்ணர் மீதும் அன்னை சாராதாதேவியார் மீதும் இயற்றிய மந்திரங்களை அனைவரும் ஓதவர். பின்னர் தமிழ்ப் பாடல்கள், பஜனை என்று இறைவனைப் போற்றும் துதிகள் நிகழும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருப்பது வேண்டும். நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளை நடைபெறும் இந்த மௌன வழிபாட்டைத்தான் தூரன் வித்யாலயத்தின் தனித்துவமான முறை என்றும் தான் எங்கும் காணாத ஒழுங்கு என்றும் கூறுகிறார். வித்யாலய நிறுவனரான தி.சு. அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் இந்த ஒழுங்குமுறையில் மிகக் கவனமாக இருந்துள்ளார். விடுதலைப் போராட்டவாதியும் அரசியல்வாதியும் விளங்கிய ஐயா அவர்கள் பல்வேறு பணிகள் காரணமாக நேரம் பிந்தி வந்து உறங்கும் சூழல் இயல்பாக ஏற்படும். அப்படியான சூழலிலும் அவர் இந்த ஒழுங்குமுறையில் கவனமாகவும் உறுதியாகவும் இருந்துள்ளார் என்பதை தூரன் அவர்களின் நினைவுக் குறிப்புகள் உறுதிசெய்கின்றன.
இந்த ஒழுங்குமுறை எளிதில் ஏற்பட்டுவிடவில்லை என்பதை தூரன் பதிவுசெய்கிறார். இக்குறிப்பு மிக முக்கியமானது. எந்த உள ஒழுங்குமுறையும் ஒருநாளில், ஓர் ஆணையில் நடைமுறைக்கு வந்துவிடாது. மாணவர்களிடம் மீண்டும் மீண்டும் இதன் முக்கியத்துவத்தைச் சொல்லியும் இதன் நற்பயன்களைப் புரிந்துகொள்ளச் செய்தும், இதன் பயனை அனுபவமாக அவர்கள் உணர்ந்த பின்னும்தான் இது நடைமுறையில் பழக்கத்திற்கு வந்திருக்கும். இந்தப் புரிதல் இந்த மௌன வழிபாட்டை வித்யாலயத்தின் தனிப்பட்ட வழிபாடாக உருவாக்கியிருக்கிறது.
ஆனால் தூரன் அவர்கள் மற்றொரு குறிப்பும் கவனிக்கத்தக்கது. மாணவர் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இந்த ஒழுங்குமுறை அவ்வளவாகப் பின்பற்றப்படுவதில்லை என்பது அக்குறிப்பு. வித்யாலய கலை அறிவியல் கல்லூரியில் நாள்தோறும் வகுப்பு தொடங்கும்முன் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் இன்றும் இந்த நடைமுறையைப் பாரக்கலாம். முதலில் திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடப்படும். பின்னர் வித்யாலய தெய்வத் திருமூவர் துதிகள் ஓதப்படும். அடுத்து கலைமகள் துதி. தொடர்ந்து தமிழ்ப்பாடல் ஒன்று பாடப்படும். அடுத்து சில மணித்துளிகள் மௌனவழிபாடு. நான் வித்யாலய கல்லூரிப் பணியில் இணைந்து 11 ஆண்டுகளாகின்றன. இன்றுவரை இதுதான் காலை கூட்டுவழிபாட்டு ஒழுங்குமுறை.
தூரன் அவர்கள் சொல்வது போல ‘இது பண்பாட்டை உண்டாக்குதல்’. “நல்ல மரபுகளை முதலிலே உண்டாக்கிவிட்டால் அவற்றை எளிதில் மாற்றவோ அழிக்கவோ இயலாது” என்று அவர் தமது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்கிறார். வித்யாலயத்தின் தனித்துவமான இந்த மௌன வழிபாட்டு ஒழுங்கு நூற்றாண்டை நெருங்கிவரும் இன்றும் இங்கு வழக்கத்தில் உள்ளதைக் காணலாம்.
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment