பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 
இதழ் - 26                                                                                    இதழ் -
நாள் : 23-10-2022                                                                      நாள் : --௨௦௨௨

   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
கூடல்
     பண்டைத் தமிழர் ஆறுகள் கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் கொண்டாடினார்கள். அவற்றைக் கூடல் என்று அழைத்தார்கள். 
     தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர் திருமுக்கூடல் என்று பெயர் பெற்றது. 
      நெல்லை நாட்டில் தாமிரபரணியும், சித்திரா நதியும், கோதண்டராம நதி என்னும் கயத்தாறும் மூன்றும் ஒன்று சேர்கின்ற இடம் முக்கூடல் என அழைக்கப்படுகிறது. 
    சோழ நாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற இடத்திற்கு அருகேயமைந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது. தென்னார்க்காட்டில் வெள்ளாறும், முத்தாறும் கூடுகின்ற இடத்தில் கூடலை யாற்றூர் என்ற ஊர் அமைந்திருக்கின்றது. 
     அதே போல கொங்கு நாட்டிலுள்ள பவானி என்பது காவிரி ஆறு, பவானி ஆறு, மாயநிலையிலான அமுதா ஆறு ஆகிய மூன்றும் சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் அதற்கு கூடுதுறை அல்லது முக்கூடல் என்றும் பெயருண்டு. இவை தேவாரப் பாடல் பெற்றவையாகும். இவ்வாறு கூடல் பெயரிலும் ஊர்ப்பெயா்கள் வழங்கப்பட்டு வருவதை அறியமுடிகிறது.

கோட்டகம்
     கோட்டகம் என்பது பெரிய ஏரியின் பெயர். காவிரி ஆறு பாயும் நாட்டில் பல கோட்டகங்கள் உண்டு. தஞ்சாவூரிலுள்ள புதுக்கோட்டகம், மானங்காத்தான் கோட்டகம் ஆகியன இவ்வாறு எழுந்த ஊர்ப்பெயர்கள் ஆகும்.
 
சமுத்திரம்
     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன. இராஜராஜ சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. எனவே, தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயர் என்று கொள்ளலாகும். 
     நெல்லை நாட்டில் அம்பாசமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின் ஆதிப்பெயர் இளங்கோக்குடி என்பது. அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள்சமுத்திரம் என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து அம்பாசமுத்திரம் ஆயிற்று. இவ்வாறு சமுத்திரம் பெயரிலும் தமிழக ஊர்ப்பெயர்கள் வழங்கி வருவதை அறியலாம்.
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment