இதழ் - 166 இதழ் - ௧௬௬
நாள் : 20 - 07 - 2025 நாள் : ௨௦ - ௦௭ - ௨௦௨௫
‘தங்கத் தாத்தா’ என அன்பாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிய செய்திகள் வருமாறு :
வட்டக் கண்ணாடி தும்பைப்பூ நிற தலைமயிர், வெள்ளைத்தாடி நெற்றி நிறைய திருநீறு பொன்முறுவலுடன் கூடிய முகம். கலப்பு இன்றி செந்தமிழில் பேசுபவர்.இவ்வாறான குணங்களை உடைய நவாலியூர் சோமசுந்தரப்புலவர் இயற்றிய பாடல்களை யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளினால் மிகவும் விரும்பி பாடப்பட்டது.
கந்தவனக்கடவை முருகன் மேல் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடல்களில் உளமுருகிய யோகர் சுவாமிகள் ஒரு கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்து அக்கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து திருமுறையாளர்களை அழைத்துத் தானே தலைமையும் தாங்கி அந்நூலுக்கான அரங்கேற்றத்தைச் செய்துள்ளார்.
அந்த அரங்கேற்றத்திற்கு இந்தியாவில் இருந்து வந்த திருமுறையாளர்களான சங்கர சுப்பையர் என்ற வித்துவான், இராமநாதன் என்பவர் பாடல்களைப் பாடிய போது மயில் வந்து தோகை விரித்து ஆடியதாம்.
"தெய்வீகப் புலவர் பாடிய பாடலுக்கு மயில் வந்து ஆடும் தானே" என யோகர் சுவாமிகள் சொல்லி உள்ளார். இதனை விபுலானந்த அடிகள் தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஈழநாடு என்ற பத்திரிகையிலும் இது தொடர்பான செய்தி வந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியதே.
பள்ளி பாடநூல்களில் சோமசுந்தரப் புலவரின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
ஆடி மாதப் பிறப்பு, அதாவது ஆடிப்பிறப்பு இன்றுவரை ஈழத்தில் உள்ள வடபகுதி மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, மிகச் சிறப்பாக மக்களால் அவர் தம் இல்லங்களில் ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல் ஒன்றினைப் பார்க்கலாம்.
"ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே"
எனத் தொடரும் பாடலில் உள்ள விடுதலை என்ற சொல் விடுமுறையைக் குறிக்கின்றது. அது மட்டுமின்றி இப்பாடல் ஆடிக் கூழ் எவ்வாறு செய்வது என்பதனையும் ஆடிப்பிறப்புக்கு என்னென்ன செய்வார்கள் என்பதனையும் விளக்குகிறது. எல்லோராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்ட,படிக்கப்படுகின்ற பாடல் இது.
ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காச்சி, கொழுக்கட்டை அவித்துப் பகிர்ந்து உண்டுள்ளனர் மக்கள். இன்றைய காலகட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில்லை. ஆனால் ஆடிப்பிறப்பன்று பள்ளிகளில் ஆடிக்கூழ் காச்சி நவாலியூர் சோமசுந்தரப்புலவரை நினைவு கூர்ந்து ஆடிப்பிறப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது சிறப்பான ஒன்றாகும்.
வீடுகளில் ஆடிப்பிறப்பு அன்று குத்து விளக்கு ஏற்றி, தலைவாழை இலையில் அதனை வைத்து, வாழைப்பழமும் கொழுக்கட்டையும் கூழும் வைத்து தம் முன்னோரை நினைத்து வழிபடுகின்ற வழக்கம் இன்று வரை ஈழத்தின் வட பகுதியில் காணப்படுவது சிறப்பானதாகும்.
ஆடிப்பிறப்பு என்ற பாடலுக்கான வலையொளி இணைப்பு :
( வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்... )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment