இதழ் - 20 இதழ் - ௨௦
நாள் : 11-09-2022 நாள் : ௧௧-௦௯- ௨௦௨௨
பழந்தமிழர்கள் வகைப்படுத்திய ஐவகை நிலங்களுள் ஒன்று மருதம். வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதமாகக் கருதினர். மலையில் புறப்படும் ஆறு காடு வழியாக சமவெளியை அடைந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது. பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரமாக மக்கள் குடியேறி வாழ்வாதாரங்களைத் தேடிக்கொண்டனர். அதனால் மருதநிலம் ஆறு பாய்கின்ற நிலமாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது.
ஆறு பாய்கின்ற கரை ஓரங்களில் மக்கள் வசிப்பிடங்களைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். ஆற்றின் பயன்பாட்டைக் கொண்டு உழவையும் அது சார்ந்த தொழில் முறைகளையும் வளர்த்துக் கொண்டனர். ஆற்றங்கரைகளில் ஊர்கள் அமைந்தன. “ஆறில்லா ஊர் அழகில்லை” என்ற பழமொழியும் இதற்கு ஏற்பவே சொல்லப்பட்டது.
பழங்காலத்தில் துறைமுகங்களும் பெரிய நகரங்களும் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்திருந்தன. அங்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றது. அப்பகுதி பெரிய தொழில்நகரமாக இருந்து வந்துள்ளது. இதுவும் மருதநிலத்திற்கு அடையாளமாக அமைந்திருந்தது எனலாம்.
பெரும்பாலும் மருத நில ஊர்களாக அணை, அரங்கம், ஆவி, இலஞ்சி, ஊருணி, ஊர், ஊற்று, ஏந்தல், ஏரி, ஓடை, கழனி, கால், கிணறு, குளம், கூடல், கேணி, கோட்டகம், சமுத்திரம், செறு, தாங்கல், துருத்தி, துறை, தோட்டம், நில அளவு, நிலம், நல்லூர், பண்ணை, பழனம், பறவையும் ஊரும், பற்று, புத்தூர், புலம், புலியூர், புன்செய், பேரேரி, பொய்கை, மடு, மடை, வயல், வாவி, விளை போன்றவை அமைந்திருந்தன. இவ்வூர் பெயர்கள் நீர் அல்லது ஆற்றின் பெயராலேயே வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வூர்களின் பெயர்க்காரணங்களைத் தெரிந்து கொள்ளவது அவசியமாகிறது.
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . .
. )
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment