பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 128                                                                               இதழ் - ௧
நாள் : 06- 10 - 2024                                                             நாள் :  -  - ௨௦௨௪




இராஜராஜன் பெயரில் எழுந்த ஊர்கள்

முடிகொண்ட சோழன்

சோழர் ஆட்சியில் அமைந்த கங்கபாடி என்னும் நாடு, இராஜேந்திர சோழன் காலத்தில் முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் பெற்றது. பழம் பெருமை வாய்ந்ததும், பாடல் பெற்றதுமாகிய பழயாறை என்ற நகரம் முடிகொண்ட சோழபுரம் என வழங்கலாயிற்று. இந்நகரம் காவிரியினின்றும் பிரிந்து செல்லும் முடிகொண்டான் என்னும் கிளையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாறு முடிகொண்ட சோழப்பேராறு என்று அக்காலத்துச் சாசனங்களில் குறிக்கப்பட்டது.

மேலும், சிதம்பர வட்டத்திலுள்ள முடிகண்ட நல்லூரும், மாயவர வட்டத்திலுள்ள முடிகொண்ட நல்லூரும், பாண்டி நாட்டுச் சிவகங்கை வட்டத்திலுள்ள முடிக்குண்டம் என்னும் ஊரும் இம்மன்னனது விருதுப் பெயரைப்பெற்று விளங்குவனவாகும். 

     கோவை நாட்டில் கொள்ளக்கால் வட்டத்தில் முடிகுண்டம் என்ற ஊரொன்று உண்டு. சாசனங்களில் முடிகொண்ட சோழபுரம் என்று குறிக்கப்படும் ஊர்ப் பெயரே இப்போது முடிகுண்டமெனக் குறுகியுள்ளது. 

முடிகொண்ட சோழீச்சுரம் என்னும் சிவாலயம் அவ்வூரிற் காணப்படுகின்றது. அஃது இராஜேந்திர சோழன் காலத்தில் எழுந்த திருக்கோயில் என்று கொள்ளலாகும். அவ்வூரில் கோயில் கொண்ட தேசிப் பெருமாள் என்னும் திருமாலுக்குக் காவிரியாற்றின் வட கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும், தென் கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன. இன்னும் அவ்வூரில் நகரஜினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும் இருந்தது. சந்திர பிரப தீர்த்தங்கரர் அவ்வாலயத்தில் எழுந்தருளியிருந்ததாகச் சாசனம் கூறும். எனவே, முடிகொண்ட சோழபுரம் சைவம், வைணவம், சமணம் என்னும் மும்மதங்களும் சிறந்து விளங்கி நகரமாகத் தோன்றுகின்றது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment