பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 12                                                  இதழ் - ௧௨

நாள் : 17-07-2022                                           நாள் : ௧௭-௦௭-௨௦௨௨

  

1. அருப்புக்கோட்டை – செங்காட்டு இருக்கை, அரும்புக்கோட்டை

     அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும். விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின்னர் அப்பெயர் மருவி அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது.

     அருப்புக்கோட்டையை அருகிலுள்ள சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. அரும்பு – மல்லிகை மொட்டைக் குறிக்கும்.


2. குளித்தலை – குளிர் தண்டலை

     காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகக் கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் மருவி குளித்தலை என்றாகியது.


3. ஊட்டி – ஒத்தக்கல் மந்து

     தொடக்கத்தில் இப்பகுதியில் "தொதவர்கள்" வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசிக்கும் ஊர் மந்து எனப்படும். அவர்களின் வீர விளையாட்டுகளில் வீரக்கல் தூக்குவது மிக முக்கியமானதாகும். அப்படிப்பட்ட ஒரு கல் இந்தப் பகுதியில் இந்தால் அப்பகுதி ஒத்தக்கல் மந்து என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்ட பின் உதகமண்ட் என்று அழைத்தனர். உதகமண்ட் என்று ஆங்கிலத்திலேயே அழைக்கப்பட்ட இவ்வூரின் பெயரை 1972ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் உதகமண்டலம் என்று தமிழ்ப்படுத்தி ஆணையிட்டார். அப்பெயர் மருவி இன்று ஊட்டி என்று ஆயிற்று.


4. விருத்தாச்சலம் – திருமுதுகுன்றம்

     விருத்தாச்சலம் = விருத்தம் + அசலம் எனப் பிரியும். இரண்டு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். விருத்தம் என்பது முதிர்ந்த என்றும் அசலம் என்பது மலை என்னும் பொருள்படும். அதனால் இவ்வூர் முதிர்ந்த மலை அல்லது முதுகுன்றம் என்று பொருள்படும். திருமுதுகுன்றம் எனவும் பழமலை எனவும் வழங்கப்பட்டு வந்த இவ்வூர், பின்னாளில் வடமொழி செல்வாக்கால் விருத்தாசலம் என்றே வழங்கப்பட்டு வருகிறது.


5. வேதாரண்யம் – மறைக்காடு


1. வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.

( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 6 ஆவது பாடல் )
….. பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா – தேவாரம் 2/6

2. வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.  

( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 10 ஆவது பாடல் )
…. வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவாரம் 2/10
 

     இப்பாடலில் வரும் ஓமம் என்பது ஓமத்தீயினையோ ஓமப்புகையினையோ குறித்து வரவில்லை; மாறாக, ஓமப்புகையினைப் போல எங்கும் பரந்து மணம் வீசுவதான நறுமணம் கமழும் பூக்களைக் குறித்தே வந்துள்ளது. சான்றாக, நறுமணம் வீசுவதால் கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. ஓமத்திரவியம், ஓமப்பொடி ஆகியவை அப்பொருளின் வாசனையால் உண்டான பெயர்கள்.

     கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல் அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல  ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘மறையினை ஓதும் காடு’ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ (மறை – வேதம்) என்ற பெயர் சூட்டினர். பின்னாளில் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கால் வேதாரண்யம் என்ற பெயரே நிலைத்துவிட்டது.


( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment