இதழ் - 147 இதழ் - ௧௪௭
நாள் : 02 - 03 - 2025 நாள் : ௦௨ - ௦௩ - ௨௦௨௫
வாலாஜா - இராணிப்பேட்டை
தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் முகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாஜா என்னும் பெயரும் உண்டு. அப்பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாஜாபேட்டைக்கு அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாலாஜாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டது. பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந்நகரம் சில காலம் சிறந்து விளங்குவதாயிற்று.
இன்னும், உடையார்பாளையத்திலுள்ள வாலாஜா நகரமும், பாலாற்றங் கரையிலுள்ள வாலாஜாபாத் என்னும் ஊரும் முகம்மது அலியின் பெயரைத் தாங்கி நிற்கின்றன. அதேபோல் வாலாஜா பேட்டைக்கு அருகேயுள்ள இராணிப் பேட்டையின் வரலாறு அறியத் தக்கதாகும். செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராஜன் என்னும் வீரன் சிறந்து விளங்கினான். முகமதிய நவாபாகிய சாதுல்லாகான் என்பவன் அக்கோட்டையின்மீது படையெடுத்தான். இருவருக்கும் கடும் போர் மூண்டது. தேசிங்குராஜன் மாற்றார் வியப்புற வீரப்போர் புரிந்து மாண்டான். அந்நிலையில் அவன் தேவியாகிய இராணி, கணவன் உயிரோடு தன் உயிரை மாய்க்க எண்ணி, உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். அப்பெண்மணியின் பெருமை என்றும் விளங்கும் வண்ணம், இராணிப்பேட்டை என்னும் பெயரால் புதியதோர் ஊரை உண்டாக்கினான். அது நெடுங்காலமாக ஒரு சிறந்த படை வீடாக விளங்கிற்று.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment