இதழ் - 17 இதழ் - ௧௭
நாள் : 21-8-2022 நாள் : ௨௧-௮-௨௦௨௨
ஆத்திசூடி (ஔவை)
ஙப்போல் வளை
உரை
'ங' என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து பயன்பாட்டிலில்லாத ஙா முதலிய தன் இன எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுள்ளவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராய் இருந்தாலும் அவர்களைத் தழுவிக்கொள்.
('ஙா' முதலிய பதினோரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. 'ங'கரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு 'ங'கர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவதுபோல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் கொள்ளலாம் - நா. மு. வேங்கடசாமி நாட்டார்)
ஆத்திசூடி வெண்பா
பாடல் - 15
தீதி லரிட்டங்கள் செய்யவுண வைக்கொள்ள
மேதினியிற் றம்மினத்தை மேவுதலால் - நீதிநெறி
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா வுற்றாரை
மாற்றிருமெய் ஙப்போல் வளை
உரை
அறவழியிற் போற்றியொழுகும் புன்னைவனநாதனெனும் அரசனே! குற்றமற்ற காகங்கள் தங்கள் உணவைக் கொள்வதற்காக அந்நிலத்திலுள்ள மற்ற காகங்களையும் அழைத்து சேர்ந்து உண்கின்றன. அதுபோல் நீயும் உன் சுற்றத்தாரையும் உடன்பேணி வாழ்வாயாக.
விளக்கம்
அரிட்டம் - காகம். மேதினி - நிலவுலகம். மேவுதல் - சேர்தல். புன்னைவனநாதன் நீதிநெறி வழுவாதவன் என்பதை “நீதிநெறி போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா” என்றார். உற்றார் - உறவினர். உறவினர் பயனற்றவராய் இருக்கும்பொழுது அவர்களைப் பேணிப்பாதுகாத்து வாழ் என்பதை “உற்றாரை மாற்றிருமெய் ஙப்போல் வளை” என்றார். காகங்களின் ஒற்றுமையுணர்வை விளக்கப்படுத்தி மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
கருத்து
'ங'கரம் போல உறவினர்களை உடன்பேணி வாழ்தல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment