பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 98                                                                                              இதழ் - 
நாள் : 10-03-2024                                                                               நாள் : 0-0-௨௦௨


 
வீரபாண்டியன்

வீரபாண்டியன்

  சோழர்கள் தஞ்சையில் தலையெடுத்தபோது பாண்டியர் பணியத் தொடங்கினர். 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட பராந்தக சோழன் பாண்டி மன்னனை இரு முறை வென்று, அவன் தலைநகராகிய மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். 

    இங்ஙனம் பலம் குலைந்த பாண்டியன் மூன்றாம் இராஜசிம்மன் என்பர். ஆயினும், அவன் மகன் வீரபாண்டியன் சோழரை வென்று, பழி தீர்ப்பதற்குக் காலம் பார்த்திருந்தான். அதற்கேற்ற வாய்ப்பும் வந்தது. வடபுலத்து வேந்தன் ஒருவன் சோழ நாட்டின்மீது படையெடுத்துக் குழப்பம் விளைவித்தான். அக்காலத்துச் சாசனங்கள் வீரபாண்டியனைச் 'சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்' என்று பாராட்டுதலால், அவன் போர்க்களத்தில் சோழன் ஒருவனைக் கொன்று புகழ் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகின்றது. அந்த வெற்றியின் காரணமாக அவன் சோழாந்தகன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். மதுரை நகரின் அருகேயுள்ள சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் அவன் பெயர் தாங்கி நிலவுகின்றது. சோழாந்தகன் என்பது இன்று சோழவந்தான் என மருவியுள்ளது. 

    வீரபாண்டியன் பெயரால் அமைந்த ஊர்கள் மேலும் சில உண்டு. நெல்லை நாட்டு நாங்குனேரி வட்டத்தில் வீரபாண்டியன் நல்லூர் என்று முன்னாளில் பெயர் பெற்றிருந்த ஊர் வீரபாண்டியம் என இன்று வழங்குகின்றது. 

    மதுரை நாட்டுப் பெரிய குளம் வட்டத்தில் மற்றொரு வீரபாண்டியன் நல்லூர் உண்டு. புல்லை நல்லூர் என்னும் பழம் பெயர் வாய்ந்த அவ்வூர் வீரபாண்டியன் பெயரைப் பிற்காலத்தில் பெற்றதென்பது கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. அவ்வீரபாண்டிய நல்லூர் இன்று வீரபாண்டி எனக் குறுகியுள்ளது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment