பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

 

இதழ் - 4                                                                இதழ் - ௪ 
நாள் : 22-5-2022                                                   நாள் : உஉ-ரு-௨உஉ

 
எழுத்துகளின் பிறப்பு

     எழுத்துகள் பிறக்கும் இடம் பற்றியும், அவ்வெழுத்துகள் தோன்றுவதற்கு உடலுறுப்புகளின் முயற்சி பற்றியும் இவ்விதழில் அறிந்து கொள்ளலாம்.

     எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள். உடம்பில் உள்ளே எழுகின்ற காற்றானது மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி உதடு (இதழ்), நாக்கு, பல், மேல்வாய், அண்ணம் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகிறது. இம்முயற்சியே எழுத்துகளின் பிறப்புக்கு அடிப்படையாகின்றது.   

நன்றி : https://thiruththam.blogspot.com/2017/09/1.html

" நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
 எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி 
 மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
 வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.”
-  நன்னூல்  -  நூற்பா. 74
என்னும் நன்னூல் நூற்பா மேற்கண்ட கருத்துகளை எடுத்துரைக்கிறது.

எழுத்துகளின் பிறப்பினை,
    1. இடப்பிறப்பு
    2. முயற்சிப்பிறப்பு என இருவகையாகப் பிரிக்கலாம்.

இடப்பிறப்பு
 
முதலெழுத்துகளின் இடப்பிறப்பைப் பற்றிக் காண்போம்.

  • உயிரெழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
( அ , ஆ , இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஔ ) 
  • இடையின எழுத்துகளும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
( ய் , ர் , ல் , வ் , ழ் , ள் )
  • வல்லின எழுத்துகள் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
( க் , ச் , ட் , த் , ப் , ற் )
  • மெல்லின எழுத்துகள் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
( ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் )
 
“ஆவி  யிடைமை யிடமிட றாகும்
 மேவு மென்மைமூக்  குரம்பெறும் வன்மை.”
  -  நன்னூல்  -  நூற்பா. 76

இடப்பிறப்பை விளக்கும் நன்னூல் நூற்பா இது.

 
முயற்சிப் பிறப்பு
  
அ, ஆ பிறத்தல்
      
“முயற்சியுள் அ, ஆ அங்காப்பு உடைய” - நன்னூல்  -  நூற்பா. 77

அ, ஆ இரு உயிர் எழுத்துகளும் வாயைத் திறப்பதால் பிறக்கும்.
(அங்காப்பு என்பதன் பொருள் வாய் திறப்பு )

இ, ஈ, எ, ஏ, ஐ  பிறத்தல்

“இ ஈ எ ஏ ஐ அங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே”    நன்னூல்  -  நூற்பா. 77
 
உயிரெழுத்துகளான இ, ஈ, எ, ஏ, ஐ இவ்வைந்தும் வாய் திறப்பதோடு மேற்பல்லின் அடியை நாக்கின் நுனியானது சென்று பொருந்தும்போது பிறக்கும்.

உ, ஊ, ஒ, ஓ, ஔ பிறத்தல்
 
 
“உ, ஊ, ஒ, ஓ, ஔ விதழ் குவிவே” -  நன்னூல்  -  நூற்பா. 77

உயிரெழுத்துகளான உ, ஊ, ஒ, ஓ, ஔ இவ்வைந்தும் வாய் திறப்பின் முயற்சியோடு உதடு குவிவதால் பிறக்கும்.

( மெய்யெழுத்துகளின் பிறப்பை அடுத்த இதழில் அறிவோம் )

 
 
( தொடர்ந்து கற்போம் . . . )
 

தி.செ. மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.
 

No comments:

Post a Comment