இதழ் - 126 இதழ் - ௧௨௬
நாள் : 22- 09 - 2024 நாள் : ௨௨ - ௦௯ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
ஏறக்குறைய பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த ஔவை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் ஒட்டக்கூத்தரும் கம்பரும் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஔவை, சங்க கால ஔவையினைப் போலவே துணைச்சலான பெண் கவியாக இருந்துள்ளார்.
இவரது பாடல்களாக தனித்தனிப் பாடல்களே கிடைத்துள்ளன. ஔவை பாடிய எழுபது (70) பாடல்கள் 'தனிப்பாடல் திரட்டு' என்ற நூலில் காணப்படுகின்றன.
அழகு தமிழில், இலகுவாக எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடல்களைப் பாடியுள்ளார் .தமிழ்ச்சுவை மிக்க இப்பாடல்களை எல்லோரும் சுவைத்தல் நன்று. இத்தொகுப்பில் உள்ள ஒரு சில பாடல்களின் தமிழ்ச் சுவையைப் பார்க்கலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா.
கற்றவர்கள் சிறப்புடன் மதிப்புடன் வாழ்ந்த காலகட்டத்தில் புலவருக்கான மதிப்பு என்பது அரசவையில் அரசரை ஒத்ததாகவே காணப்பட்டது. ஒரு நாள் ஔவை சோழ மன்னனது அரச சபைக்கு வந்தார். அங்கே கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தியார் போன்ற பல புலவர்கள் அமர்ந்திருந்தனர். மிக நெடுந்தொலைவிலிருந்து சோழனது அவைக்கு வந்த ஔவையை வரவேற்ற மன்னன் "அமர்க" என்றான். ஆனால் அமர்வதற்குரிய இருக்கை எதுவும் இல்லை இதை அறியாதவனாக "அமர்க" என்று சொல்லிவிட்டான். தனது கோபத்தினை வெளிக்காட்டாமல் வருத்தத்துடன் ஒரு பாடலைப் பாடினார் ஔவை.
அது,
‘கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று – கூனன்
கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே இடம் ‘
கூனன் = சங்கு
சங்கிற்குத் தேன் கிடைக்கும் நாட்டில், எனக்கு இருக்க இருக்கை கிடைக்காதா? இப்பாடல் மூலம் கற்றவருக்கு உரிய மதிப்பை அனைவரும் கொடுக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறார்.
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment