பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 48                                                                                       இதழ் -
நாள் : 26-03-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
 
 
இல்
 
 
இல்
 
    தமிழில் “இல்” என்ற சொல் பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களில் காணப்படுகின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் என்னும் அழகிய பெயரைப் பெற்றுள்ளது. அன்பின் இருப்பிடம் ஆகிய அவ்வூர் இப்பொழுது கீழ் அம்பில் என்று வழங்கும்.
 
    அதேபோல தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருப்பாச்சில். அவ்வூர் இப்பொழுது திருவாசி என்னும் பெயரில் ஸ்ரீரங்கத்தின் அருகே உள்ளது.
 
    சில பழம் பெயர்களில் அமைந்த இல் என்னும் சொல், இக்காலத்தில் ஊர் என்று மாறியிருக்கக் காணலாம். ஆதியில் திருச்செந்தில் என வழங்கிய ஊர் இப்பொழுது திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்திலும் சாசனத்திலும் மைலாப்பில் என்று கூறப்படும் ஊர் பிற்காலத்தில் மைலாப்பூர் ஆயிற்று. இன்னும் இடை மருதில் என்றும், படை மருதில் என்றும் பெயர் பெற்ற ஊர்கள் இப்பொழுது முறையே திருவிடை மருதூர் ஆகவும், திருப்புடை மருதூர் ஆகவும், விளங்குகின்றன. தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலைநகர் மணவில் என்பதாகும். அஃது இப்பொழுது மணவூர் என மாறியுள்ளது.
 
    இன்னும் இல் என்னும் பெயருடைய சில ஊர்கள், பண்டைப் புலவர்கள் பெயரோடு இணைத்துச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. அரிசில் என்னும் ஊரில் பிறந்த புலவர் அரிசில் கிழார் என்றும், அஞ்சில் என்றும் ஊரில் தோன்றியவர் அஞ்சில் ஆந்தையார் என்றும், பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர் பொருந்தில் இளங்கீரனார் என்றும், கள்ளில் என்ற ஊரில் பிறந்தவர் கள்ளில் ஆத்திரையர் என்றும் பழைய நூல்களித் குறிக்கப்படுகின்றனர்.
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment