இதழ் - 194 இதழ் - ௧௯௪
நாள் : 15 / 03 / 2026 நாள் : ௧௫ / 0௩ / ௨௦௨௬
சிலாதரின் குழப்பத்தைக் கண்ட துர்வாசர் மென்னகை புரிந்தார். “சிலாதரே! என்ன குழப்பம்?” என்றார். “ஐயனே! யாருடைய ஆசிரமம் இது? எதற்காக இங்கு அழைத்துவந்துள்ளீர்கள்? என்று குழம்பி நிற்கிறேன்” என்று சிலாதர் பணிந்தார். சிவஞானக்கொழுந்து தோன்றும் நிலம் இங்குதான் உள்ளது என்று எண்ணமிட்டவாறே “தெளிவு விரைவில் கடைக்கும் வாருங்கள்” என்று சிலாதரின் கரம்பற்றி ஆசிரம வாயிலைக் கடந்து உள்ளழைத்துச் சென்றார்.
வசிஷ்டர் ஒரு மரத்தடியில் நின்று சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நுழைவுவாயிலில் துர்வாசரைக் கண்டதும் சீடன் ஒருவனை அனுப்பி தன்னறைக்கு அழைத்துவரச் செய்தார். துர்வாசரைக் கண்ட வசிஷ்டர் மிக மகிழ்ந்தார். அவர் சென்ற தலங்கள் குறித்து விசாரித்தறிந்தார். சில பேச்சுகளுக்குப்பின் சிலாதரை சுட்டிக்காட்டி இவர் யார் என்று வினவினார். “வசிஷ்டரே! இவர் விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்தேன். இவர் என் அன்பிற்குரியவர். சிலாதர் என்று பெயர். திருவைந்தெழுத்தோதி ஐயாற்றில் கறைக்கண்டரின் அருள்பெற்றவர். இவருக்கு தங்கள் தங்கை சாருலட்சணையை திருமணம் செய்துவைக்கும் எண்ணத்துடன் இங்கு அழைத்து வந்தேன். தங்கள் எண்ணம் என்னவோ?” என்று நிறுத்தினார்.
“என் சம்மதம் இருக்கட்டும் துர்வாசரே! சாருலட்சணையின் விருப்பம் என்ன என்பதை அறிவோம்” என்று தன் சீடனை அழைத்து ஏதோ சொன்னார். சற்று நேரத்தில் மூன்று பெண்கள் வசிஷ்டரின் அறைக்குள் வந்தனர். இளமையின் மலர்ச்சி மக்க நங்கையர்.
“சாரு, இவர் சிலாதர். இவருக்கு உன்னைத் திருமணம் செய்துவைக்க துர்வாசர் கேட்கிறார்”
சிலாதரை ஒருகணம் சாருலட்சணையின் கண்கள் கண்டு விலகின. உள்ளத்துள் ஏதோ அமைதியும் மகிழ்ச்சியும் ததும்பின. வயிற்றுள் ஏதோ புரள்வதை உணர்ந்த சாருலட்சணை வெட்கத்தால் முகம்சிவந்தாள். தலைகுணிந்தாள். சம்மதம் என்று சொல்லாமல் சொன்னாள். சிலாதருக்கும் சாருலட்சணைக்கும் திருமணம் அருளாளர்களின் அருள்வாழ்த்துடன் நடைபெற்றது. திருவையாற்றில் இல்லறத்தை மேற்கொண்டனர்.
நன்மக்கட்பேறு இல்லாமையால் வாய்க்கும் புன்னாம நரகத்திற்கு அஞ்சி துர்வாசரின் வழிகாட்டுதலுடன் சாருலட்சணையைத் திருமணம் செய்துகொண்ட சிலாதருக்கு மேலும் சோதனை கண்டது. திருமணமாகியும் மக்கட்பேறு வாய்க்கவில்லை. கலங்கினார் சிலாதர். துர்வாசரிடம் அடைக்கலமானார்.
(தேவார மொழி தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment