இதழ் - 175 இதழ் - ௧௭௫
நாள் : 21-09-2025 நாள் : ௨௧-௦௯-௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
இசையாளுமை
1933ஆம் ஆண்டு பெரியசாமித்தூரன் கோபிசெட்டிபாளையம் வைர விழாப் பள்ளியிலிருந்து வந்து வித்யாலயத்தில் ஆசிரியப்பணியேற்றபொழுது வித்யாலயம் போத்தனூரில் சிறிய பள்ளியாகவே இயங்கிவந்தது. பெரியநாயக்கன்பாளையத்திற்கு வித்யாலயம் இடம்பெயர்ந்த பின்னர் 1948ஆம் ஆண்டுவரை பெரியசாமித்தூரன் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் அவரது பங்களிப்பு வித்யாலயத்திற்குப் பல்வேறு வகைகளில் கிடைத்தது. தன்னையும் பல்வேறு துறைகளில் அவர் செம்மைப்படுத்திக் கொண்டார். அவற்றுள் இசைத்துறையில் அவர் உயர்வுகண்டது குறிப்பிடத்தக்கது.
வித்யாலயத்தில் “ஜெய ஸ்ரீ ராமகிருஷ்ண தேவா” என்னும் பாடலை அடிக்கடி கேட்கமுடியும். அப்பாடலை எழுதியவர் தூரன் அவர்கள். ராமகிருஷ்ணர் மீது மட்டுமல்லாது சாரதையன்னை, சுவாமி விவேகானந்தர், விநாயகர், முருகன், சிவபெருமான், பார்வதியன்னை போன்றோர் மீதும் பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் கீர்த்தனை வடிவலானவை.
பள்ளி, கல்லூரிக் கல்விக் காலத்திலேயே இசையார்வம் கொண்டவராயினும் வித்யாலயத்தில் பணியாற்றிய காலத்தில் தூரன் அவர்கள் தனது இசைத்திறனை மேம்படுத்திக் கொண்டார். வித்யாலய அன்பர்களுக்காகவும் தனது ஆன்ம நிறைவுக்காகவும் அவர் தொடர்ந்து கீர்த்தனைகளை இயற்றினார். அதற்கு இசைப் பயிற்சி அளித்தவர் குறித்த குறிப்பு அவரது எழுத்துகளில் காணக்கிடைக்கிறது.
‘கீர்த்தனை அமுதம்’ என்ற நூலிற்கு தூரன் அவர்கள் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார். “ஸ்வரக் குறிப்பு எழுதி ஒரு கீர்த்தனையின் பல்லவி, அனுபல்லவி, சரணங்களில் சங்கதிகள் பலவற்றையும் சேர்த்து மெருகிட்டு உருவாக்க எனது குருநாதர் சங்கீத வித்துவான் திரு சிவராமகிருஷ்ண பாகவதர் அவர்களும், சங்கீத வித்துவான் திரு கோவிந்தராவ் அவர்களும் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். எனது குருநாதரிடத்தில் எனக்கு அளவு கடந்த மரியாதையும் அன்பும் உண்டு என்றாலும் அவரிடத்திலே எனக்குப் பிடித்த மாறுதல்கள் பலவற்றையும் செய்யுமாறு சொல்வதில் நான் பின்வாங்கியதில்லை. அவரும் கீர்த்தனை ஒவ்வொன்றும் சிறப்பாகப் பட்டை தீட்டப்பெற்று பிரகாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமுடையவராய் இருந்ததால் என் ஆவலைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார் என்பதை இந்தச் சமயத்தில் நன்றி உணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.”
தூரன் அவர்களின் கூற்றில் வெளிப்படும் இரண்டு இசையாளுமைகள் அவரது இசைக் குருநாதர்களாவர். அவர்களே அவரது இசைத் தேர்ச்சிக்குக் காரணமானவர்கள். மேற்குறிப்பிட்ட இருவருள் கோவிந்தராவ் அவர்கள் வித்யாலயத்திலிருந்து தூரன் அவர்கள் கலைக்களஞ்சியப் பணிக்காக சென்னை சென்ற பின்னர் இசையுதவி செய்தவர். முன்னவர் வித்யாலயப் பணிக்காலத்தில் பயிற்சியளித்தவர் என்பது வெளிப்படை.
தமிழிசை வளர்ச்சிக்கும், பண்ணாராய்ச்சிக்கும் வித்திட்ட பெருமகன்களுள் தூரன் அவர்களும் குறிப்பிடத்தக்கவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவரது இசைப்பாடல்களை ‘தமிழிசைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளது. அத்தொகுப்பை எடுத்துக்கொண்டு தனது இசைக் குருநாதரான திரு சிவராமகிருஷ்ண பாகவதர் அவர்களுடன் பழனி முருகனை வழிபடச் சென்றபொழுது ஓர் அற்புதம் நிகழ்ந்ததாக தூரன் அவர்கள் நினைவுக் குறிப்புகளில் பதிந்துள்ளார். அது என்ன அற்புதம்?
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment