இதழ் - 143 இதழ் - ௧௪௩
நாள் : 02 - 02 - 2025 நாள் : ௦௨ - ௦௨ - ௨௦௨௫
ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊர் நோக்கி ஔவை சென்று கொண்டு இருந்தார். நடந்து களைத்த ஔவை பசி மேலிட, ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஓர் ஆட்டிடையன் ஔவையாரின் நிலையைப் பார்த்து அவரது நிலைக்கு இரங்கி, அவருக்கு கூழைக் கொடுத்து அவரது பசிக்களைப்பைப் போக்கினான்.
பசி நீங்கிய ஔவை அவனைப் பார்த்து, “அப்பா நீ யார்? உனது பெயர் என்ன? உனது ஊர் எது?’’ என்று கேட்க, அவனோ, ”அசதியாய் இருக்கிறது” என்றான். அசதியாய் இருக்கிறது என்று மட்டும் கூறியதைக் கேட்ட ஔவையாருக்கு ஒன்றும் புரியவில்லை.
”என்னது! இவன் எதைக் கேட்டாலும் அசதியாய் இருக்கிறது என்றே கூறுகிறான்?” என்று எண்ணிக் கொண்டு, சரி இவனைப் பற்றிக் கேட்டால் இவ்வாறு கூறுகிறான். இவனது தந்தையைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் கூறுகிறான் என்று பார்ப்போம் என்று மனதில் எண்ணிக் கொண்டு, ‘‘அப்பா! நீ எனது பசியைப் போக்கி என் களைப்பையும் போக்கி விட்டாய். நீ உன்னைப் பற்றிக் கூறாவிட்டாலும் உனது தந்தையார் பெயரையாவது கூறுவாயா?’’ என்று வினவினார்.
அதனைக் கேட்ட அவன், மீண்டும், ‘‘அசதியாய் இருக்கிறது’’ என்று கூறினான். ஔவையாருக்குக் குழப்பம் மேலிட்டது. சரி இவனது வீடு எங்கிருக்கிறது என்றாவது தெரிந்து கொள்வோம் என்று கருதி, ‘‘அப்பா உனது குடிசை எங்கிருக்கிறது? அதையாவது கூறுவாயா? அல்லது அதற்கும் இதனையே சொல்வாயா?’’ என்று கேட்டார். ”ஐவேல் இருக்கும் குடிசை’’ என்று பதில் கூறினான்.
இப்பதிலிலிருந்து, ஔவையார் அவனது பெயர் அசதி என்றும் அவனது ஊர் 'ஐவேல்' என்றும் அறிந்து அவனைப் பற்றி கோவை நூல் ஒன்று பாடினார். அதுவே 'அசதி கோவை' என்று வழங்கப்படுகின்றது. இந்த ஐவேலி கொங்குமண்டலத்தில் இருக்கிறது. இவ்அசதிக்கோவை நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் மற்றும் மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 1 என்ற நூல்களில் அசதி கோவைப் பாடல்கள் காணப்படுகின்றன. மு.அருணாச்சலம், முனைவர் மு.ஆனந்தி ஆகியோர் அசதி கோவைப் பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளனர்.
இதுவரை தமிழ்ப் புலவரான ஔவை பற்றிய பல செய்திகளை தமிழமுதம் இதழ்வாயிலாக அறிந்து கொண்டோம். வரும் கிழமை வெள்ளிவீதியார் என்ற தமிழ்ப் புலவர் பற்றிப் பார்க்கலாம்.
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment