பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 8                                                                    இதழ் -   
நாள் : 19-6-2022                                                      நாள் : ௧௯ -௦௬- ௨௦௨௨
 

சார்பெழுத்துகள் - உயிரளபெடை

     உயிர் + அளபெடை = உயிரளபெடை. அளபெடை என்றால் நீண்டு ஒலித்தல் என்று பொருள்படும். பேச்சுவழக்குச் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும், இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

சான்று  

    அம்மாஅ
 
    அளபெடை இரண்டு வகைப்படும்.
  1. உயிரளபெடை
  2. ஒற்றளபெடை
1. உயிரளபெடை
 
     உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) ஓசை குறையும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலும் நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பது அளபெடை என்பர்.
 
     அளபெடுப்பதை அறிந்து கொள்வதற்கு நெடில் எழுத்துக்குப் பின் அதன் இனமான குறில் எழுத்து அதன் பக்கத்தில் வரும். இதுவே உயிரளபெடை ஆகும். அளபெடை செய்யுளில் முதல், இடை, கடை மூவிடங்களில் வரும்.
 
        இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில்
        அளபெழும் அவற்றவற்று இனக்குறில் குறியே 
                                                 - நன்னூல் நூற்பா. 91

சான்று
 
        ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
        ஆஅதும் என்னு மவர் 
 
       இப்பாடலில் உயிரளபெடை சொல்லின் முதலில் அளபெடைத்து வந்துள்ளது.
 
        தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
        மெய்யெனப் பெய்யும் மழை
 
     இப்பாடலில் உயிரளபெடை சொல்லின் இடையில் அளபெடைத்து வந்துள்ளது.
 
         அனிச்சப்பூக் கால்களை யாள்பெய்தாள் நுசுப்பிற்கு
         நல்ல படாஅ பறை

 
     இப்பாடலில் உயிரளபெடை சொல்லின் இறுதியில் அளபெடைத்து வந்துள்ளது.
 
 
உயிரளபெடையின் வகைகள்

உயிரளபெடை மூன்று வகைப்படும்.
  1. செய்யுளிசை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
 
1. செய்யுளிசை அளபெடை

     செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

சான்று
 
         வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
         வாழ்நாள் வழியடைக்குங் கல்

 
2. இன்னிசை அளபெடை
 
     செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
 
சான்று
 
         கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
         எடுப்பதூஉம் எல்லாம் மழை
 
     கெடுப்பதும் எடுப்பதும் என அமைந்தாலும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது எனினும் அளபெடை கூட்டப்பட்டு இருப்பது இன்னிசைக்காக என்பதனை நாம் அறியலாம்.
 
3. சொல்லிசை அளபெடை

     செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாக இருந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
 
சான்று
 
        உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
        வரனசைஇ இன்னும் உளேன்

 
நசை - விருப்பம் : விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல் வினை அடையாக மாறியது.



( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment