இதழ் - 115 இதழ் - ௧௧௫
நாள் : 07- 07 - 2024 நாள் : 0௭ - 0௭ - ௨௦௨௪
ஔவை (கி.பி -2)
ஔவையும் அதியனும்
பண்டைய காலத் தமிழகத்தில் அதியர் குடியில் பிறந்த நெடுமான் அஞ்சி மிகச் சிறந்த வீரன், போர் நுட்பம் நிறைந்தவன், ராஜதந்திரம் மிக்கவன், வள்ளல்தன்மை உள்ளவன், ஈவதில் விருப்புள்ளவன் .கொடைவள்ளல்களுள் ஒருவனாக பார்க்கப்படுபவன். தனக்குரிய அடையாள மாலையாகப் பனம் பூ மாலையைச் சூடுபவன். போரில் விருப்பமுள்ள இவன் ஆட்சி செய்த தகடூர் இக்காலத்தில் தர்மபுரி என அழைக்கப்படுகிறது. குதிரை மலையும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
ஔவை புலமைமிக்க புலவர் வரிசையில் இருந்தாலும் அவள் பாடல்களை இசைத்து ஆடிப்பாடுபவளாக மட்டுமன்றி, மிகுந்த புத்திக்கூர்மை உள்ள ஒருத்தியாகவும் அரசியல் ஆலோசனைகளைக் கூறுகின்றவளாக மட்டுமல்ல அதியனின் விருப்பத்துக்குரிய புலவராகவும் நெருங்கிய தோழியாகவும் இருந்துள்ளாள்.
அதியமான் குறித்துப் பாடிய பல பாடல்களில் "என் ஐ" என்ற பதத்தினைக் கையாண்டுள்ளாள் ஔவை. உரிமையுடன் அன்புமிக்கு 'என் தலைவா' என அவள் அழைக்கும் பாங்கு மிகுந்த வாஞ்சையுடன் கூடிய நட்பின் பெருமையை வெளிக்காட்டும்.
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையில் நடக்க இருந்த போரினை ஔவை தூது சென்று தடுத்த செயலினை அனைவரும் அறிவோம். அந்த நிகழ்வின் மூலம் ஔவையின் மதிநுட்பத்தினை அறிந்து கொள்ளலாம். வஞ்சப்புகழ்ச்சி அணி மூலம் தொண்டைமானைச் சிந்திக்க வைத்து போரைத் தவிர்த்து மக்களை போரழிவிலிருந்து காப்பாற்றிய பெருமை அவளுக்கு உண்டு.
போர் என்பது அக்காலத்தில் வாழ்வின் ஒரு பகுதியாகவும் சிலருக்குப் போரே வாழ்வாகவும் அமைந்திருந்தது. இதனைச் சங்க இலக்கியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அதியமான், ஓரி, காரி மூவரும் குறுநில மன்னர்கள் மட்டுமன்றி வள்ளல்கள் எழுவரில் அடங்கப் பெறுபவர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர்களிடையே ஒற்றுமை இல்லாதிருந்தது. தமிழகத்தில் இவ்வாறான போக்கு காணப்பட்டமையை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. சேரனின் நண்பனான காரியினது கோவலூர் மீது படையெடுத்து அவ்வூரை அழித்து காரியையும் கொன்றான் அதியன். இதனால், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமானுக்கும் இடையே பகைமை புகைந்துகொண்டே இருந்தது. பெருஞ்சேரல் இரும்பொறை அதியன் மீது கடுஞ்சினம் கொண்டு, தகடூர் மீது படையெடுத்தான். இவர்களது போர் நெடு நாட்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இப்போர் தொடங்க முன்னரே ஔவை சேரநாட்டு மன்னனையும் அவன் படை வீரர்களையும் எச்சரித்துப் பாடல்கள் பாடியுள்ளார். திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்கிறாள். பொருதும் அவனொடு பகைத்ததால் பலநாடுகள் பாழானதையும், பல மன்னர்கள் அழிந்து போனதையும் நினைப்பூட்டுகிறாள் . 'அவனுடன் பகைத்தோர் உய்தல் அரிது ' என்கிறாள். பகைப் படைகளைப் பார்த்து, “எம் தலைவனுடன் போர் செய்ய முந்தாதீர்; என் சொல்லைக் கேட்காது முந்தினால் அழிந்து போவீர்!” என்று பல பாடல்களில் அச்சுறுத்துகிறாள்.
போர் கடுமையுற்ற பொழுது, அவனுக்கு ஊக்கவுரைகள் சொல்லி மனந்தளராமல் போர்செய்யத் தூண்டுகிறார்.
புலி சீறின் மான் கூட்டம் நிற்குமா?
ஞாயிறு காய்ந்தால் இருளும் உண்டோ?
பெருமிதக் காளைக்குக் கடக்கமுடியாத
நிலப்பகுதியும் உண்டோ ? (புறநானூறு 90)
இப்பாடலை படிக்கும் போது படிப்பவர்க்கும் வீரத்தைக் கொடுப்பதாக இருக்கும். தன் நண்பனான மன்னன் அதியனை மட்டுமின்றி, அதியனைக் கவசம்போல நின்று காக்கும் படைமறவர்களையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
"உன்னுடைய பாட்டனுக்கு இவனுடைய தந்தை உதவினான். பகைவர் வேலை எடுத்து எறியும் போரில் கண் இமைக்காது முன்னே நின்று தடுத்து உதவினான். 'தச்சன் செய்த வண்டிச் சக்கரத்தில் ஆரைக்கால்கள் பாய்ந்து நிற்கும் குடம் போல வேல்கள் உடம்பில் பாய்ந்து நிற்க, மாண்டான்'. இவனும் வீரத்தில் புகழ் நிறைந்து வலிமை மிக்கவன். மழை மொழியும்போது தாழங்குடை மழையைத் தடுப்பது போல 'உன்மீது பாயும் வேலை இவன் தடுத்துத் தாங்குவான்". ( புறநானூறு 290 )
ஔவை பாடலில் காணப்படும் வீரத்தையும் உவமைச் சிறப்பினையும் பாடலை உள்வாங்கிச் சுவைத்தாலே அனுபவிக்க முடியும்.
இந்தச் சக்கரத்தின் நடுவில் உள்ளது குடம் எனச் சொல்லப்படும் குறடு என்ற பகுதி இதில் ஆரைக்கால்கள் பாய்ந்திருப்பதுபோல அவன் உடம்பில் வேல்கள் பாய்ந்திருந்தன என்கிறார் ஔவை.
படையில் காணப்படும் படை மறவர்களையும் வாழ்த்தி ஊக்கப்படுத்தத் தயங்கவில்லை ஔவை .இவளது பாடல் அனைவருக்குமானது.
போரின் முடிவு என்னவானது என்பதனை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அந்த வரலாற்று நிகழ்வினை ஔவை பாடும் பாடல் மூலம் நோக்கினால் அதனை கண்ணெதிரே காண்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். அதனைக் காண...... .
(வரும் கிழமையிலும் ஔவை வருவாள்…)
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment