இதழ் - 184 இதழ் - ௧௮௪
நாள் : 07 - 12 - 2025 நாள் : ௦௭ - ௧௨ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 184
' ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு'
விளக்கம்
ஒரு தாய் தன் இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு நீரும் மற்றொருவருக்கு பாலும் கொடுப்பது முறையல்ல என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
' ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு'
முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.
ஒரு தாய் எவ்வாறு தன் இரண்டு குழந்தைகளுக்கு பாரபட்சம் இல்லாமல் உணவைக் கொடுப்பாளோ அதைப் போலவே ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசன் ஒருவன் தன் குடிகளில் ஏழ்மையானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் அவரவர் முறையறிந்து செங்கோண்மை வழுவாமல் நீதி செலுத்துதல் வேண்டும்.
அதைவிடுத்து தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல், அரசனுக்கு மிகவும் பழி தரும் செயலாகும். நீதியின் முன் ஏழையையும் பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே 'ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment