பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 25                                                                                    இதழ் -
நாள் : 16-10-2022                                                                       நாள் : ௧௬ - ௧௦ - ௨௦௨௨

ஆத்திசூடி (ஔவை)
மண்பறித்து உண்ணேல்
உரை
     பிறருடைய நிலத்தை வன்முறையால் கைப்பற்றி அதன் வருவாயால் உண்டுயிர் வாழ வேண்டாம்.

ஆத்திசூடி வெண்பா-23 (இராமபாரதி)

பாடல் – 23
     கூற வழக்கெண்ணாத கூதை சகடற்கு வண்டி
     ஏற முன்போல் வாராதிருந்ததனால் - றேறியென்றும்
     மாதிலகா புன்னைவன மன்னாகேள் பூமியதில்
     ஏதிலன் மண்பறித்துண் ணேல்

உரை
     மனிதர்களுள் பெரும் சிறப்புடையவனே! புன்னைவன மன்னவனே! கேட்பாயாக. கூற வழக்கினை எண்ணாத குளிர்க்காற்று சக்கரம் வண்டியேற முன்போல் வாராததனை நினைத்துப் பார்த்து உலகத்தில் ஏதுமற்றவர்களின் நிலத்தினைப் பறித்து உணவுண்டு உயிர்வாழாதே.

விளக்கம்
     கூதை – பனிக்காற்று, குளிர்க்காற்று. சகடம் – சக்கரம். தேறி – நினைத்துப்பார்த்து. மா – பெரிய, உயரிய. திலகன் – சிறந்தவன். ஏதிலன் – பொருளற்றவன், ஆதரவற்றவன். பறித்து என்றதனால் நிலத்தை வன்முறையால் கைப்பற்றி என்று கொள்க.

     “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்” (குறள், 171) என்ற வள்ளுவரின் சொல்லும் இவண் ஒப்பிடத்தக்கது. பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டு அதனைக் கவர்ந்து கொள்ள நினைப்பவன் குடும்பம் அழியும், பழியும் ஏற்படும் என்கிறார் வள்ளுவர். அதனால் பிறரது பொருளை வௌவாதே என்று புன்னைவன மன்னனுக்கு இராமபாரதி அறிவுறுத்துகிறார். (இவ்வெண்பாவில் வரும் எடுத்துக்காட்டு கதை எதைக் குறிப்பிடுகிறது என்று புலப்படவில்லை.)

கருத்து
     பிறரது பொருளை வன்முறையால் கைப்பற்றினால் பழிநேரும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020  

No comments:

Post a Comment