பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 25                                                                                    இதழ் -
நாள் : 16-10-2022                                                                       நாள் : ௧௬ - ௧௦ - ௨௦௨௨
 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
 
கிணறு
     மருத நிலத்தில் நீர் நிலைகளில் ஒன்றான கிணறுகள் பெரும்பாலும் நிறைந்துள்ளன. அவற்றில் ஊற்று நீர் காரணமாக கிணறுகள் நீர்வளத்துடன் காணப்படுகின்றன. கிணற்றை மையமாகக் கொண்டு தோன்றிய ஊர்களும் மருதநிலத்தில் அமைந்துள்ளன. நெல்லைப் பகுதியிலுள்ள நாரைக்கிணறு, கொங்கு நாட்டிலுள்ள வெள்ளக்கிணறு, கிணத்துக்கடவு முதலியவை கிணற்றால் பெயர் பெற்ற ஊர்களாகும்.
 

குளம்
     ஏரிக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்குப் பயன்படுவது குளம். குளத்தின் அருகில் ஊரை அமைத்த மக்கள் அந்தக் குளத்தின் அளவு, குளத்தின் தன்மைக்கேற்ப அவ்வூருக்குப் பெயர் வைத்துள்ளனர். நெல்லை நாட்டில் கருங்குளமும், திருச்சிராப்பள்ளியிலுள்ள செங்குளமும் அந்தந்தக் குளங்களின் நீரின் தன்மையைக் காட்டுகின்றன. மதுரையிலுள்ள பெருங்குளம் என்னும் ஊர் அந்தக் குளத்தின் அளவைக் காட்டுவதாக அமைந்துள்ளது. தஞ்சை நாட்டிலுள்ள பூக்குளமும், தென்னாற்காட்டிலுள்ள புதுக்குளமும் அக்குளங்களின் தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளன. அதேபோல கொங்குநாட்டில் சர்கார் சாமக்குளம், புளியகுளம் முதலிய ஊர்கள் மருதநிலத்தில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.


கேணி
     ஊற்று நீரால் நிறைந்துள்ள இடத்திற்கு கேணி என்று பெயர். கேணி என்னும் நீர்நிலை மருதநிலத்தில் காணப்படுகிறது. இந்தக் கேணியின் அருகில் மக்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டு அந்தக் கேணியின் பெயரையும் தங்கள் ஊருடன் சேர்த்து வைத்துக்கொண்டனர். அந்த அளவில் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி என்ற புகழ்ப்பெற்ற ஊர் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
 

 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment