பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 118                                                                                         இதழ் - ௧௧
நாள் : 27- 07 - 2024                                                                      நாள் :  - 0 - ௨௦௨௪



இராஜராஜன்

   உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன் திருமாவளவன் என்று தமிழ் இலக்கியம் கூறுவது போலவே, தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட இராஜராஜன் சோழர் குலத்தைத் தலையெடுக்கச் செய்தவன் என்று சாசனம் அறிவிக்கின்றது. 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாளத் தொடங்கிய இம்மன்னன் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழ்நாட்டின் பெருமையைப் படிப்படியாக உயர்த்தினான்.

விருதுப் பெயர்கள்

      இராஜராஜன் மன்னனது இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதாகும். இவன் சேர மன்னனையும், பாண்டியனையும் வென்று அடக்கி, மூன்று தமிழ்நாட்டையும் ஒரு குடைக்கீழ் அமைத்தபோது. மும்முடிச் சோழன் என்னும் பெயருக்கு உரியனாயினான். 

     பின்னர்த் தென்பாலுள்ள இலங்கை என்னும் ஈழ நாட்டையும், வடபாலுள்ள வேங்கை நாடு, கங்கபாடி முதலிய நாடுகளையும், குடபாலுள்ள கொல்லம், குடகம் ஆகிய நாடுகளையும் வென்று, மன்னர் மன்னனாக விளங்கிய போது இராஜராஜன் என்ற விருதுப் பெயர் பூண்டான். 

     அப்பால் கப்பற்படை கொண்டு பன்னீராயிரம் தீவங்களைக் கைப்பற்றி நிலத்திலும் நீரிலும் வெற்றி பெற்று வீறுற்ற நிலையில் ஜயங் கொண்டான் என்னும் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டான். 

     இவன் வீரத்தால் பெற்ற விருதுகளோடு சீலத்தால் பெற்ற பெயர்களும் சேர்ந்து அழகுக்கு அழகு செய்தன. "சிவனடி பணியும் செல்வமே செல்வம்" எனக்கொண்ட இராஜராஜன், சிவபாத சேகரன் என்னும் செம்மை சான்ற பெயர் தாங்கினான். 

     ஈசனார்க்குக் கோயில் எடுத்துப் பணி செய்த பான்மையில் கோச்செங்கட் சோழன் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவன் இராஜ ராஜன் ஆவார்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment