இதழ் - 188 இதழ் - ௧௮௮
நாள் : 11-01-2026 நாள் : ௧௧-0௧-௨௦௨௬
‘பரசமயம்’ என்றால் ‘பிற சமயங்கள், அயல் சமயங்கள்’ என்று பொருள், பரதேசி என்பது போல. ‘பரதேசி’ என்றால் ‘பிற தேசத்தவர், அயல்நாட்டவர்’ என்று பொருள். (சுதேசி என்றால் உள்நாட்டவர் என்று பொருள்).
சைவத்தைப் பொருத்தமட்டிலும் பரசமயங்கள் என்றால் அவை சமணமும் பொளத்தமும் என்பது திருஞானசம்பந்தர் காலத்து வழக்கம். சமணமும் பௌத்தமும் பெருவழக்காக ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால் இக்குறிப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவதானிக்கமுடிகிறது.
சமண சமயம் சேர்ந்து தருமசேனராகி சிவபெருமான் அருளால் சூலைநோய் கொண்ட திருநாவுக்கரசர், திருவதிகையில் தமக்கை திலகவதியாரை அடைந்து திருவடி பணிந்தபொழுது,
“கோளில்பர சமயநெறிக் குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர் எழுந்திரீர் எனமொழிந்தார்”
( பெ. புரா., திருநாவு. புரா. 64 )
என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் சமணத்தில் நின்றதை ‘பரசமய நெறி’ என்று சேக்கிழார் கூறுவது நோக்கத்தக்கது.
உமாபதி சிவம் இயற்றிய சாத்திரநூல்களுள் ஒன்றான சங்கற்ப நிராகரணம்
“முதிர்பர சமயத் திதமுறும் அரசரும்”
என்று திருநாவுக்கரசர் சமண சமயத்தில் நின்றதை குறிப்பிடுகிறது.
“மாசுசேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந் திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார் பரசம யங்கள் பாற”
( பெ.புரா., திருஞான. புரா. 818 )
என்பது சேக்கிழார் பாடல்.
“அங்கவள் உருவங் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார் பரசம யத்தி னுள்ளோர்”
(பெ.புரா., திருஞான. புரா. 818)
என்று பூம்பாவையை உயிர்ப்பித்தபொழுது சமணர்களின் நிலையைக் காட்ட வந்த சேக்கிழார் குறிப்பிடுகிறார். அப்பொழுது அவர்களைப் ‘பரசமயத்தின் உள்ளோர்’ என்ற சொற்களால் அடையாளப்படுத்துகிறார்.
“தாங்கிய முத்தின் பைம்பூண் தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார் பரசம யங்கள் வீழ்த்தார்”
(பெ.புரா., திருஞான. புரா. 1228)
“தவஞ்செய்சா தியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே”
என்று மாற்று சமயங்கள் என்ற பொருண்மையில் அருணந்திசிவமும் இச்சொல்லைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
சைவம், சமயங்களை நான்குவகையாகப் பகுத்துக் கூறும். அவை புறப்புறச் சமயங்கள், புறச்சமயங்கள், அகப்புறச்சமயங்கள், அகச்சமயங்கள் என்பன. இவற்றுள் சமணமும் பௌத்தமும் புறப்புறச் சமயங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளதை சிவஞானமுனிவர் இயற்றிய சிவஞானபோத பேருரையுள் தெளிவாகக் காணலாம். இவற்றையே பரசமயங்கள் என்கின்றனர். “புறப்புறச்சமயங்களான சமண பௌத்தத்தை சிங்கம் யானையை வெல்வது போல வென்றவர்” என்ற பொருளில் திருஞானசம்பந்தரை ‘பரசமயக் கோளரி’ என்கின்றனர். அரி என்றால் சிங்கம் என்று பொருள். திருஞானசம்பந்தர் மூன்று வயதினராக இருந்தபொழுது சீர்காழி தோணியப்பர் கோயிற் குளக்கரையில் உமையம்மையால் ஞானப்பால் புகட்டப்பெற்றார். பரசமயக் கோளரியான ஞானசம்பந்த சிறுபிள்ளைக்குப் பாலூட்டியதால் அம்மையை ‘சிங்கக் குட்டிக்குப் பாலூட்டியவர்’ என்று மகாவித்துவான் குறிப்பிட்டார் என்பதைத் தெளியலாம்.
“குருந்துமழ களிறொளி விளக்கெனச் சண்பையிற்
குலவுபர சமயசிங்கக்
குருளையுள் உவப்பமெய்ஞ் ஞானஇன் பால்முன்
கொடுத்தபைங் கோலமயிலே”
(வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ், பருவம் 2, பா.5)
என்பன மகாவித்துவானின் சொற்கள்.
‘பரசமய சிங்கக் குருளை’ என்பது திருஞானசம்பந்தரைக் குறித்தது. குருளை என்றால் சில விலங்குகளின் இளமைப் பெயர் என்பது தொல்காப்பிய மரபியல் செய்தி. இங்கு சிங்கக்குட்டி என்னும் பொருளில் வந்தது. பரசமயக் கோளரி என்று நம்பியாண்டார் நம்பிகளும் சேக்கிழாரும் தங்கள் நூல்களில் திருஞானசம்பந்தரை விதந்து பேசியிருப்பதைக் காணமுடிகிறது. அதனை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தமது வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழில் நயமாகப் பயன்படுத்தியிருப்பதையும் அறிந்து இன்புறமுடிகிறது.
உமையம்மையிடம் ஞானப்பாலுண்டு ‘தோடுடைய செவியன்’ என்று முதற்பதிகத்தைப் பாடிய திருஞானசம்பந்தர் ஏன் தோடுடைய செவியன் என்று முதற்சொல்லமைத்துப் பாடினார் என்பது இப்புராணங்களின் வழி விளங்கிக் கொள்ளமுடிகிறது.
சிவபெருமான் வலக்காதில் ஆண்கள் அணியும் குழையும் இடக்காதில் பெண்கள் அணியும் தோடும் அணிந்தவாறு காட்சியளிப்பது வழக்கம். அதாவது சிவபெருமானின் இடப்பாகம் அம்மையினுடையது; பெண்பாகம். அதனால் இடக்காதில் தோடுடன் காட்சியளிக்கிறார். சிவபெருமானைப் பாடவந்த திருஞானசம்பந்தர் பெண்கள் அணியும் காதணியான தோட்டை முதலில் வைத்து ஏன் பாடினார்? என்ற வினா எழுகிறது. காரணம், உமையம்மையினால் பாலூட்டப் பெற்றவர் என்பதனாலாகும். அம்மைவழியாகவே சிவபெருமானை அடைய இயலும் என்பது சித்தாந்தம் தரும் செய்தி.
“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்”
(திருவருட்பயன், குறள், 2)
என்பது திருவருட்பயன் தரும் செய்தி. திருஞானசம்பந்தர் அம்மையை முதலில் பாடியதற்கு இதுவும் காரணமாகலாம்.
தோடுடைய செவியன் என்ற திருஞானசம்பந்தரின் முதற்பதிகத்தின் முதற்சொல்லை விளங்கிக் கொள்வதற்கு இப்புராணங்களும் சித்தாந்தக் கருத்துகளும் பெருந்துணை செய்கின்றன. அத்துணை கொண்டு தேவார மொழியை மனங்கொள்ளலாம்.
தோடுடைய செவியன் நிறைவுற்றது.
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment