பக்கங்கள்

தமிழ் வளர்த்த செவ்வேள்

இதழ் - 161                                                                               இதழ் - ௧
நாள் : 15 - 06 - 2025                                                           நாள் :  -  - ௨௦௨



தமிழ் வளர்த்த செவ்வேள்

     பதிகம் என்ற இலக்கிய வகைமை, ஊர்தோறும் சென்று இறைவனைத் தமிழால் பாடுதல் என்பன திருஞானசம்பந்தருக்கு முன்பே காரைக்காலம்மையாரால் தொடங்கப்பட்டுவிட்டது. ஆயினும் அதனைத் திட்டவட்டமான ஓர் அமைப்பு முறைக்கு உட்படுத்தித் தம் பதிகங்களை அமைத்துக் கொண்டவர் திருஞானசம்பந்தரே ஆவார்.

     பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பிற்குப் பதிகம் என்று பெயர். திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் முதல் ஏழு பாடல்களில் அத்தலக் குறிப்புகளையும் அங்குள்ள இயற்கை அமைப்புகளையும் அங்கு வாழ்ந்த அடியார்கள் பற்றிய செய்திகளையும் பதிவு செய்திருப்பார். எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்பிருக்கும். ஒன்பதாவது பாடலில் பிரம்மனும் திருமாலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிக் காணாது வருந்திய புராணச் செய்தி இடம்பெற்றிருக்கும். பத்தாவது பாடலில் சமண, பௌத்தர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும். பதிகத்தின் இறுதியில் ஒரு பாடல் தனித்துக் காணப்படும். அதனை ‘கடைக்காப்பு’ என்பர். கடைக்காப்பு என்பது பதிகத்தின் பலன் சொல்லும் இறுதிப் பாடலாகும்.

   பதிகப் பலன் சொல்லும் பாடலாயினும் அதில் நான்கு முக்கியமான செய்திகள் இருப்பதைக் காணலாம்.
  • பாடப்பட்ட இடம்
  • பாடியவர் பெயர்
  • பாடப்பட்ட சூழல்
  • பதிகப் பலன்
     இத்தகைய பதிகக் கட்டமைப்பின் வாயிலாகத் திருஞானசம்பந்தர் ஒரு வரலாற்றுப் பதிவாளராகவும் செயல்பட்டுள்ளதை அறியலாம்.

   பதிகந்தோறும் கடைக்காப்பில் தன்னையும் தனது பதிகங்களையும் தமிழெனும் அடைமொழியால் அடையாளப்படுத்தியவர். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், அவருக்கு முன்பு தமிழை அடைமொழியாகப் பயன்படுத்தித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஒருவரும் இல்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    அவர் பயன்படுத்தும் அடைமொழிகளுள் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டுவது தேவை.

“நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்பது அவருடைய பயன்பாடு.

“பெருகிய தமிழ் விரகினன்” என்கிறார்.

“நற்றமிழ்க் கின்துணை ஞானசம்பந்தன்” என்று தன்னை மதிப்பிடுகிறார்.

     “ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்மாலை” என்று தனது பதிகத்தை அறிமுகம் செய்கிறார்.

     இவை போல் நூற்றுக்கணக்கில் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சான்றுகள் உள்ளன.

    தமிழை அவர் அடையாளப்படுத்தும் இடங்கள் மட்டுமே கவனிக்கத்தக்கவை. தண்டமிழ், மெய்த்தமிழ், தகுதமிழ், வண்டமிழ், நற்றமிழ், மிகுதமிழ், இன்தமிழ், தெரிதமிழ், சீரார்தமிழ், செந்தமிழ், விரிதமிழ், குன்றாத்தமிழ், இசைமலிதமிழ், பலஓசைத்தமிழ், ஆரா அருந்தமிழ், திருநெறியதமிழ், நலங்கொள் தமிழ், ஞானமிக்க தண்டமிழ், பேரியல் இன்டமிழ் என்பன சில சான்றுகள்.

     தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர், தெருதோறும் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்தவர், திருக்கோயில்களில் தமிழ்ப்பதிகம்பாடி வழிபடச்செய்தவர், பல இலக்கியங்களுக்கு மூலவர் என்பதாலேயே திருஞானசம்பந்தர் தமிழ்க்கடவுளாக ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர் போன்றோரால் கொண்டாடப்படுகின்றார்.

  தமிழின் அருமையை யார் உணர்ந்தார் என்று சொல்வது அறிவுடைய செயலல்ல மதுரையின் நீரும், நெருப்பும் அதை அறியும் என்று பரஞ்சோதி முனிவர் மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதியில் பாடுவதற்கு திருஞானசம்பந்தரின் அனல்வாதமும், புனல்வாதமுமே காரணமாகும்.

    “யாரறிவார் தமிழருமை என்கின்றேன் என் அறிவீனம் அன்றோ உன் மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும்” என்பன பரஞ்சோதி முனிவரின் பாடலடிகள்.

     எனவே அருணகிரிநாதர் இங்ஙனம் பாடியிருப்பதில் வியப்பில்லையன்றோ. திருஞானசம்பந்தரின் தமிழ்ச்செயல்பாடுகளை நன்குணர்ந்து பாடிய அருணகிரிநாதர் நமக்கு ஒரு நெறியை எடுத்துக்காட்டுகிறார். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக வந்து காட்டிய பெருவழி அது. ஆம், தமிழால் இறைவனைப் போற்றி வழிபடுங்கள். அதுவே உய்யும் வழி என்பதை அறிவுறுத்துகிறார்.

  தமிழ் என்பது மொழிமட்டுமன்று, அது உயிரொப்பது என்பது காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் செய்தியாகும். சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு முருகப்பெருமான் வழியாக அகத்தியருக்கு உணர்த்தப்பட்டு உலகத்தில் பரவிய மொழி தமிழ் என்பது தொன்மக்கருத்து. தமிழின் தெய்வத்தன்மையை உணர்த்தும் தொன்மம் அது. தமிழ்நெறியை நிலத்தில் வளம்பெறச் செய்ய தமிழ்க்கடவுளான முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக மண்ணில் பிறந்து தமிழ்த்தொண்டாற்றினார் என்பதை இலக்கியங்கள் வழியாக நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. பெருகிய தமிழ் விரகினன் என்ற தொடருக்கு பொருத்தமான பெருந்தகை திருஞானசம்பந்தர் என்றால் அது மிகையல்ல !

(தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment