பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 23                                                                  இதழ் -
நாள் : 02-10-2022                                                     நாள் : --௨௦௨௨

 
 
இன எழுத்துகள்
 
     இன எழுத்துகள் என்பவை நட்பு எழுத்துகள் என்று அழைக்கப் படுகின்றன. 
 
     இவ்வெழுத்துகள் ஒத்தத் தன்மையைக் கொண்ட எழுத்துகளைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துகள் பிறக்கும் இடம், எழுத்துகளை ஒலிப்பதற்கான முயற்சி மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். இதனை நன்னூலார் பின்வருமாறு வரையறுக்கிறார்.

“தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன்  றாதியோர் புடையொப் பினமே”. (நன்னூல் நூ.எண்.72)

     ஆறு வல்லின மெய்யெழுத்துகளுக்கும் (க், ச், ட், த், ப், ற்) ஆறு மெல்லின எழுத்துகளும் (ங், ஞ், ண், ந் ,ம், ன்) இன எழுத்துகள் ஆகும். 
 
     சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

சான்று
     திங்கள், பஞ்சு, கண்டான், பந்தல், தென்றல், அம்பு
     இடையின எழுத்துகள் (ய், ர், ல், வ், ழ், ள்) ஆறும் ஒரே இனமாகும்.


உயிரெழுத்துகள்
     மெய்யெழுத்துகளைப் போலவே உயிரெழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும் . குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்பது இன எழுத்தாகும் ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்பது இன எழுத்தாகும்.

“ஐ ஔ இ உச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரினமாய் வரன்முறையே. (நன்னூல், நூற்பா. எண். 71)

     சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்.

சான்று
     ஓஒதல், தழீஇ
     தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை.

இன எழுத்துகள்
 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020 
 

 
 

No comments:

Post a Comment