இதழ் - 55 இதழ் - ௫௫
நாள் : 14-05-2023 நாள் : அ௪-0௫-௨௦௨௩
பேட்டை
தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப் பெயர்பெற்றது. சேலத்தின் மேல்பாகத்தில் செவ்வாய்ப் பேட்டை என்னும் சிற்றூர் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சந்தை கூடும் இடமாதலால், அஃது அப்பெயர் பெற்றது என்பர். திருநெல்வேலிக்கு மேற்கே பேட்டை என்ற பெயருடைய ஓர் ஊர் உண்டு. பலவகையான பட்டறைகள் அங்கு இன்றும் காணப்படும்.
ஐரோப்பிய இனத்தவருள் போர்ச்சுகீசியரைத் தமிழ் நாட்டார் பறங்கியர் என்று அழைத்தனர். ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் நம் நாட்டில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னமே பறங்கியர் வாணிகம் செய்வதில் வளமுற்றிருந்தனர். அவர்களால் திருத்தப்பட்ட ஊர்களில் ஒன்று தென்னார்க் காட்டிலுள்ள பறங்கிப் பேட்டையாகும். சிங்கப்பூர், சிங்களம் முதலிய நாடுகளோடு கடல் வழியாக வர்த்தகம் செய்யும் சோழ மண்டலத் துறைமுகங்களில் பறங்கிப்பேட்டையும் ஒன்று. ஆடை நெய்தலும், பாய் முடைதலும் அங்கு நடைபெற்ற கைத்தொழில்கள்.
சென்னை மாநகரத்தில் சில பேட்டைகள் உண்டு. தண்டையார் பேட்டை, வண்ணார் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய இடங்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை என்று பெயர் பெற்றன. தண்டையார்ப் பேட்டையில் இப்பொழுதும் நெய்யுந்தொழில் நடந்து வருகிறது. கம்பெனியார் காலத்தில் சில குறிப்பிட்ட ஆடைகளைக் கைத்தறியின் மூலமாகச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட ஊர் சிந்தாதிரிப்பேட்டையாகும்.
தஞ்சை நாட்டிலுள்ள அய்யம் பேட்டையும், அம்மா பேட்டையும் நெசவுத் தொழிலாளர் நிறைந்த ஊர்கள். அய்யம் பேட்டையில் நூலாடையோடு பட்டாடையும், பாயும் செய்யப்படுகின்றன.
மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள்.
வட ஆர்க்காட்டிலுள்ள வாலாஜா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும். பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந்நகரம் பஞ்சு வியாபாரத்திலும், வாணிகத்திலும் கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது. இக்காலத்தில் வாணிகம் குறைந்துவிட்டாலும், கைத்தொழில் நடைபெற்று வருகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment