பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 14                                                                இதழ் - ௧௪
நாள் : 31-07-2022                                                   நாள் : ௩௧-௦௭-௨௦௨௨

   

பழமொழி – 14

” அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும் ”
 
     தர்மங்கள் (அறம்) செய்தால் நம்மை ஆட்கொண்டிருந்த பாவங்கள் (அல்லவை) நீங்கி விடும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
     அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
     திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
     புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
     அல்லவை நீங்கி விடும்'
 
     அறவழிகளில் ஈட்டிய செல்வங்களை, பயனுள்ள வகையில் வறியோர்களுக்குத் தர்மம் செய்வதே ஈகை ஆகும். அவ்வாறு செய்தால் அந்தத் தர்மம் (அறம்), நம்மை ஆட்கொண்டிருந்த பாவங்கள் நீங்கி மேன்மை பெறச் செய்யும் என்பது இப்பழமொழியின் பொருளாகும். இதனை, “செல்வத்துப் பயனே ஈதல்” (புறம் – 189) என்ற புறநானூற்றுப்  பாடலால் தெளிவு பெறலாம்.

     வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் – 221)
 
     என்பது குறள். அதாவது வறியோர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை ஆகும் மற்றவை அனைத்தும் பயன் எதிர்பார்த்துக் கொடுப்பதாகும் என்ற வள்ளுவர் வாக்கினாலும் இப்பழமொழியின் உட்பொருளை அறியலாம்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 
 

No comments:

Post a Comment