நம் பழந்தமிழகம் நீண்ட பரந்த கடற்கரைப் பரப்பளவைக் கொண்டுள்ளது. பாரததேசத்தின் வணிக நகரங்களில் தென்னிந்தியாவின் கடற்கரை நகரங்களே பெரும்பங்கு வகித்து வந்துள்ளன. தமிழரின் ஐவகை நிலங்களுள் கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலப்பரப்பு மூவேந்தர்களின் நாடுகளான சேர, சோழ, பாண்டி நாடுகளில் காணப்பட்டன.
முன்னாளில் சோழ நாட்டுக் கடற்கரை சோழ மண்டலக்கரை என வழங்கி வந்தது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் அவர்களின் தவறாக உச்சரிக்கப்பட்டுக் கோரமண்டலம் என மருவி வழங்கப்படலாயிற்று.
பாண்டிய நாட்டுக் கடற்கரைகளில் நினைக்க முடியாத அளவிற்கு முத்துக்கள் கிடைத்தமையால் அந்நாட்டுக் கடற்கரை முத்துக்கரை எனப் பிறநாட்டாரால் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல சேரநாட்டுக் கடற்கரை மேல்கடற்கரை என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.
நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரம் கடலும் கடற்கரையும் என்பதால், அம்மக்கள் கடற்கரை ஓரங்களில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஊர்கள் பெரும்பாலும் அளம், கரை, களர், குப்பம், துறை, பட்டினம், பாக்கம் என்ற பொதுப்பெயர்களைச் சேர்த்து வழங்கி வந்துள்ளனர்.
No comments:
Post a Comment