சாலை
பழங்காலத்தில் பாண்டிய நாட்டில் கொற்கைத்துறைமுகம் சிறந்திருந்து விளங்கியது. வாணிபம் செழித்தோங்கி வளர்வதற்கு நாணய வசதி வேண்டும். ஆதலால், கொற்கை என்னும் பழைமையான மூதூரின் அருகே அக்கசாலை என்ற ஊர் ஒன்று அமைக்கப்பெற்றது. நாணயம் அடிக்கும் இடமாகிய அக்கசாலையை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் அக்கசாலை என்று பெயர் பெற்றது.
முதற் குலோத்துங்க சோழன் சாசனத்தில் அக்கசாலை ஈச்சுரமுடையார் கோவில் குறிக்கப்படுதலால், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அவ்வூர் அழிவுறாது இருந்தது என்பது விளங்கும். இச்சாசனம் அக்கசாலைப் பிள்ளையார் கோவிலிற் காணப்படுகின்றது.
பழமையும் புதுமையும்
சில ஊர்களின் பழமையும் புதுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெல்லை நாட்டில் பழவூர் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரத்தில் பழையாறை என்னும் ஊர் பாடல்பெற்ற தலமாக அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் பழையகோட்டை என்னும் ஊர் உண்டு. புதிதாகத் தோன்றும் ஊர்கள், புது என்னும் அடைமொழியைப் பெரும்பாலும் பெற்று வழங்கப்பெற்றன.
உதாரணமாக, புதுக்கோட்டை, புதுச்சேரி, புதுக்குடி, புதுக்குளம், புதுப்பேட்டை, புதுப்பாளையம், புதுப்புதூர், புதுவயல் முதலிய ஊர்ப்பெயர்களால் அவ்வூர்கள் புதிதாக வந்தவை என்பது வெளிப்படுகின்றன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment