இதழ் - 77 இதழ் - ௭௭
நாள் : 15-10-2023 நாள் : ௧௫-௧0-௨௦௨௩
துர்க்கம்
மலைகளில் அமைந்த கோட்டை, துர்க்கம் என்று பெயர் பெறும். தமிழ் நாட்டில் சில துர்க்கங்கள் உண்டு. வட ஆர்க்காட்டு வள்ளிமலை அருகேயுள்ள நெடிய குன்றத்தில் அமைந்த கோட்டை மகி மண்டல துர்க்கம் என்று குறிக்கப்படுகின்றது. அம்மலை மூன்று திசைகளில் செங்குத்தாக ஓங்கி நிற்கின்றது. மற்றைய திசையும் மதிற் சுவர்களால் செப்பமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
காவல்
இன்னும், பெருங் கோட்டைகளைப் பாதுகாப்பதற்கும், பகைவர் வருகையை அறிந்து தெரிவிப்பதற்கும் சில அமைப்புகள் முற்காலத்தில் இருந்தன. கோட்டையின் பாதுகாப்புக்காக ஏற்பட்டமையால் காவல் என்று பெயர் பெற்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த நடுக்காவல் என்னும் ஊரும், செங்கற்பட்டிலுள்ள கோட்டைக் காவலும், உத்தர கெடிக்காவலும் இத்தன்மை வாய்ந்தன என்பது தெரிகின்றது.
வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூர் என்பது சாசனங்களில் ஆண்மையூர் என்று பெயர் பெற்றுள்ளது. அங்குள்ள நடுகல்லில், வில்லும் வாளும் தாங்கிய வீரன் ஒருவன், மாற்றார் அம்புகள் உடலிற் பாய்ந்தும் முனைந்து நிற்கும் நிலை காட்டப்படுகின்றது; பகைவர்க்குப் புறங்கொடாது விழுப்புண் பட்டு வீழ்ந்த அவ்வீரனது பெருமைக்கு அறிகுறியாக ஆண்மையூர் என்று அதற்குப் பெயரிட்டுள்ளனர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment