நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமாகும். இந்நிலப்பரப்பில் உப்புத் தன்மை அதிகமாக அமைந்துள்ளது. உப்பு நிலம் களர் எனவும் அழைக்கப்பெறும். களர் என்னும் பெயர் ஒரு சில நெய்தல் நில ஊர்ப்பெயர்களில் காணப்படுகின்றது. திருக்களர் என்பது தேவாரம் பாடல் பெற்றத் தலமாகும். களர் என்ற நிலப்பகுதி அளம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றது.
பட்டினம்
நெய்தல் நிலத்திலுள்ள கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. இந்நாளில் பட்டணம் என்னும் சொல் சிறப்பு வகையில் சென்னைப்பட்டணத்தைக் குறித்தல் போன்று, அந்நாளில் பட்டினம் குறித்தது. அந்நகரத்தைப் பற்றி சங்கப் புலவர் ஒருவர் இயற்றிய பாட்டு பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. அப்பட்டினத்தில் வணிகர் குலமணியாய்த் தோன்றிப் பின்பு முற்றும் துறந்து சிறப்புற்ற பெரியார் பட்டினத்தார் என்றே இன்றும் பாராட்டப்படுகின்றார்.
எனவே, முன்னாளில் பட்டினம் என்று பெயர் பெற்றிருந்தது காவிரிப்பூம்பட்டினமே என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் அந்நாளில் பூம்புகார் நகரம் என்றும் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டது. பூம்பட்டினம் எனவும், பூம்புகார் எனவும் அந்நகர்க்கு வழங்கப்பட்டப் பெயர்களை ஆராய்வோ மானால், ஓர் அழகிய கடற்கரை நகரமாக அப்பட்டினம் விளங்கி வந்ததை அறியமுடிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment