இதழ் - 163 இதழ் - ௧௬௩
நாள் : 28 - 06 - 2025 நாள் : ௨௮ - ௦௬ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
வித்யாலயம் உயர்ந்த குறிக்கோளுடைய கல்வி நிறுவனம் என்பதில் ஈடுபட்டுத்தான் தூரன் இங்கு ஆசிரியப்பணி மேற்கொண்டார். உயர்குறிக்கோளுடைய நிறுவனத்தில் நெறிமுறைகளும் அப்படித்தானே இருந்தாக வேண்டும். தூரனின் நினைவுக்குறிப்பிலிருந்து வித்யாலய விதிமுறைகளும் நெறிமுறைகளும் என்று சில தெரியவருகின்றன. வித்யாலய மாணவர்கள் சில ஒழுங்குமுறைகளுக்குத் தாங்களாகவே கட்டுப்பட்டு நடந்துவந்துள்ளனர். வித்யாலயத்தில் நடைபெறும் அன்றாடப் பணிகளுக்குத் தனியாக 'ஆள்' போடுவது கிடையாதாம். “பத்துத் தேய்த்தல், பெருக்குதல், சமையல் செய்தல் முதலான எல்லாப் பணிகளுக்கும் ஆள் என்பதே இல்லை. மாணவர்கள் தாமாகவே செய்து கொள்ள வேண்டும்” என்று தூரன் எழுதுகிறார்.
அவர் தரும் குறிப்புகளில் ஒன்று என் உளத்தை ஈர்த்தது. “பொய் சொல்வது கேவலம் என்று வித்யாலயத்தில் எல்லோரும் கருதினார்கள்” என்பது அக்குறிப்பு. கலியுகத்தில் மனிதர்கள் செய்ய வேண்டிய 'தவம்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் 'உண்மை' பேசுவதைக் கூறுவார். அத்தனை எளிதல்ல என்பதால் அதனைத் தவம் என்று குருதேவர் குறிப்பிட்டாரோ என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் பொய் பேசுவது பீடன்று என்ற எண்ணம் வித்யாலயத்தில் இயல்பாக இருந்துள்ளது அதன் சிறப்புகளுள் ஒன்று.
கல்வி நிறுவனம் என்றால் தேர்வு என்ற நடைமுறை இருக்கத்தானே செய்யும். வித்யாலயத்திலும் தேர்வு இருந்தது. மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால் அதனை மேற்பார்வையிட ஆசிரியர்கள் போக வேண்டிய தேவையே இருந்ததில்லையாம். காரணம் வித்யாலய மாணவர்களுக்கு 'காப்பி' அடிக்கும் பழக்கம் இல்லை என்பதால். எத்தனை தன்னாளுமைத்திறன். பிறர்பார்க்க நல்லவன் என்பதல்லாமல் தன்னெஞ்சறிய நல்லவன் என்பதில் தானே சிறப்புண்டு.
வித்யாலயம் மாணவர்களின் அகவாழ்வில் மட்டுமல்லாது புறவாழ்விலும் அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு அன்று வழக்கிலிருந்த “பைல்” (File) நடைமுறை தக்க சான்று. தூரனின் சொற்களிலேயே இதனைச் சொல்வது நல்லது. “வித்யாலய மாணவர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னால் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாகவும் வரிசையாவும் செல்வார்கள். இல்லத் தலைவர் (House Master) அங்கு அமர்ந்திருப்பார். பல் நன்றாகத் துலக்கியிருக்கிறானா, பித்தான் ஒழுங்காகப் போட்டிருக்கிறானா, கோபி சந்தனம் இட்டிருக்கிறானா என்று அவர் சோதனை செய்வார். இப்படி வகுப்பு வாரியாக வரிசையாகச் செல்வதற்கு “பைல்” (File) என்று பெயர்”.
(வித்யாலய நினைவுகள் தொடரும் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment