பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 189                                                                                        இதழ் - ௧
நாள்   : 01 / 02 / 2026                                                                   நாள்   :  0௧ / 0 / ௨௦௨



இளங்கோவடிகள்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இளங்கோ என்ற சமண சமயத்தை சேர்ந்த துறவி எழுதியுள்ளார். இவரை அடிகள் என்ற அடை கொடுத்து இளங்கோவடிகள் என்று அழைக்கின்றோம்.

தமிழ் தாத்தா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் உ வே சாமிநாதையர் அவர்கள் "தமிழின் உயிர் நூல்" சிலப்பதிகாரம் என்று கூறியுள்ளார்.

"நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் - மணி யாரம்படைத்த தமிழ்நாடு"
என்றார் பாரதியார்

மேலும், பேராசிரியர் மு. வரதராசனார் 
“சிலப்பதிகாரம் தமிழரின் பண்பாட்டு களஞ்சியம்” என்றார்.

அறிஞர்களால் பலரால் வியந்து போற்றப்பட்ட தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம் தமிழ் மக்களது வாழ்வியல் மூலம் தமிழ் மொழியின் சிறப்பினை உணர்த்துகிறது. 

    ஐவகை நிலங்களை வகுத்து வாழ்ந்த  மக்களின் வாழ்வியலை குன்றக்குரவை, ஆச்சியர் குரவை, நாடுகாண் காதை, கானல்வரி வேட்டுவவரி முதலியவற்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். 

"கொட்டி குடம் குடக்கு குடக்கூத்து
பாண்டரங்கம் மல்லல் தண்டியல்
குரவை வேரல் களியால் அல்லியத்து
என்றிவை மாதவி ஆடிய ஆடலே"

  • இந்த செய்யுள்  மூலம்  பதினொரு வகை ஆடல்களை மிக அழகு தமிழில் கூறியுள்ளார்.
  • மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய செய்யுள் தமிழின் திறனை அறிந்து கொள்ளலாம்.
  • மக்கள்  தம்வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை தம் வாயால் பாடி அதனை வெளிப்படுத்துவதை நாட்டுப்புற இலக்கியம் என்பார்கள். இது வாய்மொழி இலக்கியமாக இருந்தது. இதனை சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.
  • சிலப்பதிகாரத்தில், அம்மானை, ஊசல், குரவை, வள்ளைப் பாட்டு ஆகியன உள்ளதனைக் குறிப்பிடலாம்.
  • தமிழ் இலக்கணத்தின் அணி பல்வேறு இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. 
  • உவமை அணி, உருவக அணி, தற்குறிப்பேற்ற அணி, இயல்பு நவிற்சி அணி என்பன கையாளப்பட்டுள்ளன. 
    இவ்வாறு தமிழரது வாழ்வியலை மட்டுமின்றி தமிழின் பெருமையையும் இன்றுவரை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும் இலக்கியத்தினைக் கொடுத்த தமிழ் புலவரான இளங்கோவை வாழ்த்தி வணங்கலாம்.

முனைவர் சாந்தி மகாலிங்கசிவம்
தமிழார்வலர்
கோயம்புத்தூர்

No comments:

Post a Comment