இதழ் - 109 இதழ் - ௧0௯
நாள் : 26-05-2024 நாள் : ௨௬-0ரு-௨௦௨௪
பரமேஸ்வரன்
ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பரமேஸ்வரன் ஒரு சிறந்த பல்லவ மன்னன் ஆவான். இவனே விக்ரமாதித்தன் என்னும் சாளுக்கிய வேந்தனைத் திருச்சிநாட்டுப் பல்லவபுரத்திற்கு அருகேயுள்ள பெருவள நல்லூர்ப் போரில் வென்று புகழ் பெற்ற வீரன். இவன் சைவ சமய சீலன் என்பதைப் பரமேஸ்வரன் என்ற பெயரே உணர்த்துவதாகும். காஞ்சி புரத்திற்கு அண்மையிலுள்ள பரமேஸ்வர மங்கலம் என்னும் ஊர் இவன் பெயரால் விளங்குகின்றது. இம்மன்னன் கூரம் என்ற ஊரில் ஒரு சிவாலயம் எடுத்து, அதற்குப் பரமேஸ்வர மங்கலத்தை நன்கொடையாகக் கொடுத்த செய்தி கூரத்துச் செப்பேடுகளில் காணப்படுகின்றது.
நந்திவர்மன்
கும்பகோணத்துக்கு அண்மையில் நந்திபுரம் என்னும் பெயருடைய நகரம் ஒன்று பல்லவர் காலத்திற் சிறந்திருந்தது. திருமங்கை ஆழ்வார் அந்நகரில் அமைந்த விண்ணகரத்தைப் பாடிள்ளார். 'நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே' என்பது அவர் திருவாக்கு. அவ்வூர் இன்று நாதன் கோயில் என வழங்கும். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசுரிமை பெற்ற நந்தி வர்மனின் பெயர் தாங்கி நிற்பது அந்நகரம் என்பர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment