இதழ் - 165 இதழ் - ௧௬௫
நாள் : 13 - 07 - 2025 நாள் : ௧௩ - ௦௭ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
அழிசியார்
அழிசி என்னும் பெயருடைய மூவர் சங்க காலத்தில் இருந்தனர். அன்னவருள் ஒருவர் நல்லழிசியார். பரிபாடலில் இரு பாடல்கள் அவருடையன. கொல்லன் அழிசி என்பவர் இயற்றிய செய்யுட்கள் நான்கு குறுந்தொகையில் சேர்ந்துள்ளன. அழிசி நச்சாத்தனார் என்பது இன்னொரு புலவர் பெயர். ஆதன் அழிசி என்னும் தலைவன் பூதப் பாண்டியனுடைய நண்பர்களுள் ஒருவன் என்பது புறப்பாட்டால் விளங்குகின்றது. இவர்தம் பெயரை நினைவூட்டும் அழிசிகுடி என்னும் ஊர் தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் உண்டு.
மிளையார்
முன்னாளில் மிளை என்ற ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன் பெயரும், இருபுலவர் பெயரும் குறுந்தொகையால் விளங்கும். மிளை வேள் தித்தன் என்று அந்நூல் கூறுதலால், அத்தலைவனுடைய ஊரும் குலமும் பெயரும் அறியப்படுகின்றன. இன்னும் மிளைக்கந்தன், மிளைப்பெருங்கந்தன் என்னும் புலவர்கள் இயற்றிய செய்யுளும் கிடைத்துள்ளன. தென் ஆர்க்காட்டு விருத்தாசல வட்டத்தில் பெரு முளை, சிறு முளை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. மிளையென்பது முளையென மருவி வழங்குதல் இயல்பாதலால் அன்னார் அவ்வூர்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment