இதழ் - 182 இதழ் - ௧௮௨
நாள் : 16 - 11 - 2025 நாள் : ௧௬ - ௧௧ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
பக்திக் கொள்கையால் தவறவிட்ட பேறு
பெரியசாமித் தூரன் அவர்கள் சுவாமி சித்பவானந்தருடன் தாம் நெருங்கிப் பழக இயலாமைக்கு வித்யாலயப் பணிகளைக் காரணம் காட்டியதோடு மற்றொரு காரணத்தையும் தமது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிடுகிறார். அது பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான்மீது அவர் கொண்டிருந்த பக்தி.
ராமகிருஷ்ண மரபு வேதாந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. எல்லாம் ஒன்று என்பது வேதாந்த மரபு. அவ்வடிப்படையில் முருகனையும் மற்ற தெய்வங்களையும் எங்ஙனம் ஒன்றாக, சமமாகப் பாவிப்பது என்னும் குழப்பம் தூரன் அவர்களுக்க இருந்துள்ளது. அக்குழப்பத்தால் சில நல்வாய்ப்புகளைத் தம் வாழ்வில் இழந்துவிட்டதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இதை தூரன் அவர்களின் சொற்களிலேயே பார்ப்பது பொருந்தும்.
“அவரிடம் (சுவாமி சித்பவானந்தர்) நெருங்கிப் பழகத் தவறிவிட்டேன். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றிருந்தது. ‘எல்லாம் ப்ரம்ம மயம்’ என்பது குருமகராஜ் அவர்களின் அருள்வாக்கு. நான் சிறப்பான பற்றுக் கொண்டது முருகன் என்ற பழனித் தலத்தில் வாழும் பெருமானே ஆவார். எல்லாம் சமமாக, பாவிப்பது எப்படி? இதனாலும் ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்துத் துறவிகளைப் போற்றுவேன்; ஆயினும் உள்ளத்தால் ஒருங்கிணைந்து நோக்க முடியவில்லை. எனக்கு முருகனே எல்லாம். இந்த அழகுக் குழந்தையை விட்டு விட்டு, எப்படி மற்ற தெய்வங்களைச் சமமாகப் பாவிப்பது. இந்தப் பாராட்டெல்லாம் முக்கியமாக என் மனத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறது என்பதை இப்பொழுது உணர்கின்றேன்.”
“ஆனால், எல்லாத் தெய்வங்களும் ஒன்று என்ற உண்மையைக் கடைப்பிடித்தாலும் தமக்கென்று ஓர் இஷ்ட தெய்வத்தை வைத்துக் கொள்ளலாம் என்பதை அப்பொழுது உணரவில்லை. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரே எல்லாத் தெய்வங்களும் ஒன்று என்பதை தமது வாழ்க்கையிலேயே அனுபவித்துக் காட்டியிருக்கிறார் என்றாலும் அவருக்கு, காளி இஷ்ட தெய்வம் என்பதை நான் அப்பொழுது உணரவில்லை. அதேபோல, ராமர் சிலையை இஷ்ட தெய்வமாக வைத்துக் கொண்டிருப்பவர் ஒரு பிரம்ம ஞானி என்பதைத் தெரிந்து கொள்ளத் தவறி விட்டேன்.”
“முருகனையும் ஒரு இஷ்ட தெய்வமாகக் கொள்ளலாம். ஆனால் மற்ற தெய்வங்களின் மேல் சற்றுக் கீழான உணர்ச்சி ஏற்பட வேண்டியதில்லை என்று இப்பொழுது உணர்கின்றேன். ஆனால் பிடிவாதமாக முருகனே தெய்வம் என்று கொள்ள வேண்டியது இல்லை. இந்த நிலையில்தான் பல தெய்வங்களின் மேலும் கீர்த்தனைகள் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் முருகனே எனை ஆண்டருள் தெய்வம் என்று குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதைவிட, இன்று எல்லாத் தெய்வங்களும் ஒன்று என்று உணர்ந்து உணராத சமரச ஞானி போல் இருக்கும் நிலைக்கு முருக பக்தி சற்றுக் குறைந்து விட்டதாகவே எனக்குப் பல வேளைகளில் தோன்றுவதுண்டு.”
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment