இதழ் - 176 இதழ் - ௧௭௬
நாள் : 28 - 09 - 2025 நாள் : ௨௮ - ௦௯ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
பழனிமலையில் ஓர் அற்புதம்
பெரியசாமித் தூரன் அவர்களும் அவருடைய இசைக்குருநாதர்களுள் ஒருவருமான திரு என். சிவராமகிருஷ்ண பாகவதர் அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தூரனின் தமிழிசைப் பாடல்கள் தொகுப்புடன் பழனி முருகனை வழிபடச் சென்றனர். அங்ஙனம் அவர் சென்றமைக்கான காரணம் முருகப்பெருமானின் திருவடிகளில் அவ்விசைப்பாடல் தொகுப்பை அர்ப்பணம் செய்து வழிபடவேண்டும் என்பதும் முருகப்பெருமானின் திருமுன்னர் ஓரிரு இசைப்பாடல்களைப் பாடவேண்டும் என்பதுமேயாகும். தூரன் அவர்கள் முருகப்பெருமானின் மெய்யன்பர் என்பது நாம் முன்னர் கண்டதே. அவர் தனது தமிழிசைப் பாடல்களை தான் வழிபடும் தமிழ்க்கடவுளின் திருமுன்னர் அர்ப்பணிக்க விழைந்ததில் வியப்பில்லை.
சிவராமகிருஷ்ண பாகவதரும் தூரன் அவர்களும் மேற்குறித்த நோக்கத்துடன் பழனி திருக்கோயிலை அடைந்தவுடன் எதிர்பாராதவிதமாக வயலின் இசைக்கலைஞர் ஒருவரும் அங்கு அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மிருதங்க வித்துவான் ஒருவரும் உடனிணைந்தார். கோயிலில் ஒரு இசைக்கச்சேரியே அரங்கேறியது.
பின்னர் தூரன் அவர்கள் ஒரு தாம்பாளத்தில் தேங்காய், பழம், மலர் முதலியவற்றோடு தமது இசைப்பாடல் தொகுப்பு நூலையும் அதில் வைத்து பூசகரிடம் கொடுத்தார். பெற்றுக்கொண்ட பூசகர் கருவறைசென்று அபிடேக ஆராதனைகளையெல்லாம் நிறைவுசெய்துவிட்டு தாம்பாளத்தட்டுடன் அவர்களிடம் வந்தார். பூசை நைவேத்தியப் பொருட்கள் எல்லாம் தட்டில் இருக்க தமிழிசைத்தொகுப்பு நூலை மட்டும் காணவில்லை.
“புத்தகம் எங்கே?” என்று கேட்டார் தூரன்.
“தெரியவில்லையே. இதில்தானே இருந்தது. எப்படி மறைந்தது என்று புரியவில்லையே” என்று சொன்ன பூசகர் கருவறைக்குச் சென்று பார்த்து வந்து “அங்கும் இல்லை” என்றார்.
‘என்ன அதிசயம் இது?’ என்று தூரன் அவர்களும் இசைக்குருநாதரும் அங்கிருந்தோரும் வியந்தனர். தனது இசைப் பாடல்களை தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்று எண்ணியெண்ணி உளம்பூரித்தார் தூரன். இவ்வற்புதத்தை நினைந்தவாறே அனைவரும் மலையிறங்கி அடிவாரம் சேர்ந்தனர். தூரன் அவர்களின் பக்திக்கு இசை துணைபுரிந்தமையை அவருடைய எழுத்துகள் காட்டுகின்றன. அவ்விசைச் சிறப்புக்கு வித்யாலயத்திலும் சென்னையிலும் அவர்பெற்ற பயிற்சிகள் காரணம் என்றால் அது மிகையல்ல.
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment