பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 12                                           இதழ் -

நாள் : 17-07-2022                                    நாள் : ௧-௦௭-௨௦௨௨
 
 
 
பழமொழி – 12
'அழகொடு கண்ணின் இழவு'

     அழகும் வடிவும் கொண்ட ஒரு பெண், தன் கண்பார்வை இழந்துவிட்டால் அவள் எத்தகைய அழகாயிருப்பினும் அது பயனற்ற அழகே என்பது இப்பழமொழியின் விளக்கமாகும். (கண்ணின் இழவு – கண்பார்வை இழந்த, கெட்ட நிலையைக் குறிப்பதாகும்)
    முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
    விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
    இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
    'அழகொடு கண்ணின் இழவு'.

     என்னிலடங்கா செல்வங்களைப் பெற்றிருக்கும் ஒருவன் தன்னிடம் உள்ள செல்வங்களை இல்லாதோருக்கு ஈதல் வேண்டும். அவ்வாறில்லாமல் அச்செல்வங்களைத் தனக்கோ பிறருக்கோ பயன்படாத நிலையில் வைத்திருப்பது, அழகான பெண் ஒருத்தி கண்பார்வையில்லாமல் இருந்தால் அவளின் அழகும் வடிவும் எவ்வாறு பயனற்றதோ அதைப்போன்றதாகும் என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.

இதனை திருவள்ளுவர்,
    வறியார்க்கு ஒன்று ஈவதே  ஈகை மற்றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.  (குறள் – 221)

     என்னும் குறளில் வறியவர்க்கு (இல்லாதவர்க்கு) ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை ஆகும். மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் பண்பை உடையது என்று கூறுகிறார்.

இத்தகைய கிராமத்துப் பழமொழிகளினின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment