இதழ் - 197 இதழ் - ௧௯௭
நாள் : 12 / 04 / 2026 நாள் : ௧௨ / 0௪ / ௨௦௨௬
இறைவன் அருள் விளங்கும் துறைகளுள் ஒன்று திருத்தவத்துறை. "பண்டு எழுவர் தவத்துறை" என்று இப்பதியைத் திருநாவுக்கரசர் பாடியருளினார். முன்னாளில் முனிவர் எழுவர் தவம் புரிந்த பெருமை அதற்குரிய தென்பது அவர் திருவாக்கால் விளங்கும்.
இத்தகைய பெருமை சான்ற தவத்துறைக்குரிய தேவாரப் பாடல் கிடைத்திலதேனும் திருஞான சம்பந்தர் அப்பதியை வணங்கிப் பாடினார் என்று திருத்தொண்டப் புராணம் கூறும். திருச்சிராப்பள்ளியையும் திருவானைக்காவையும் வழிபட்ட பின்பு, "மன்னும் தவத்துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்தமிழ் மாலை கொண்டேத்தினார்" என்று சேக்கிழார் கூறுதலால், திருஞான சம்பந்தர் தவத்துறைப் பெருமானைப் பாமாலை பாடித் தொழுதார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆயினும், அப்பாடல் கிடைக்கப் பெறாமையால் தவத்துறை வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படும். இப்பொழுது லால்குடி என வழங்கும் ஊரே பழங்காலத்தில் தவத்துறை என்பது சாசனங்களால் விளங்குகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment