பக்கங்கள்

தமிழ் வளர்த்த செவ்வேள்

இதழ் - 160                                                                                 இதழ் - ௧
நாள் : 08 - 06 - 2025                                                             நாள் :  -  - ௨௦௨



தமிழ் வளர்த்த செவ்வேள்

  அருணகிரியாரின் திருக்குடவாயில் திருப்புகழில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானே திருஞான சம்பந்தர் என்ற கருத்து செவ்விதாய் இடம்பெற்றுள்ளது. அப்பாடலைப் பார்ப்போம்…

“கருதும் ஆறிரு தோள்மயில் வேலியை
     கருதொ ணாவகை ஓரரசாய் வரு
கவுணியோர் குல வேதிய னாயுமை ...... கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
     மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடிடம் வாதிகள் ...... கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாம் அலர்
     நிறைவதாய் விட, நீறிடவே செய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையா வான்
குடிபுகீரென மாமதுராபுரி
     யியலை ஆரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே”

    இப்பாடலில் திருஞானசம்பந்தர் உமையம்மையிடம் முலைப்பாலுண்டு, தமிழ்க்கவிஞராய் நிலமெலாம் உலவி, சமணர்களை வென்று, பாண்டியன் நெடுமாறனின் கூன் நிமிர்த்து, அடியார்களை சிவசோதியில் ஒன்றுவித்த நிகழ்ச்சிகளை குடசையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் செய்தார் என்கிறார் அருணகிரிநாதர். இவை யாவற்றையும் செய்தது திருஞானசமப்ந்தர். ஆனால் அருணகிரிநாதரோ குடவாயில் முருகன் செய்தான் என்கிறார்.

     மேலும் திருஆவினன்குடி திருப்புகழில் வரும் பாடலொன்றையும் அன்பர்கள் உன்றிப்பார்த்தால் இக்கருத்து தொனிப்பதைக் காணலாம்.

“பீலி வெந்துய ராலி வெந்தவ
 சோகு வெந்த அமண் மூகர் நெஞ்சிடை
 பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு
 பேணி யங்கெதி ராறு சென்றிட
 மாற னும்பிணி தீர வஞ்சகர்
 பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே”

     இப்பாடலலிலும் முருகப்பெருமானே திருஞானசம்பந்தர் என்று பாடப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக சமணரை வென்றதும், பாண்டியன் கூன் நிமிர்த்தியதும் முருகனே என்று சொல்லப்பட்டுள்ளது.

“உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி
 உரிய மெய்த்தவ மாக்கி ...... நல்லுபதேசத்
 தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே
 சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே”

என்று மற்றொரு திருப்புகழிலும் இதைச் சுட்டிக் காட்டுகிறார். “அமண் சேனையுபாதி கழுமலங்கற்கு உரைத்தோ னலதில்லை தெய்வங்களே” என்று கந்தரந்தாதியும் இதனையே பேசுகிறது.

     இங்ஙனம் திருப்புகழின் பல இடங்களில் திருஞானசம்பந்தரே முருகப்பெருமான் என்ற தனது கொள்கையை அருணகிரிநாதர் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். ஒட்டக்கூத்தர் ஓரிடத்தில் சொன்ன இக்கருத்தை பல தலங்களில் தாம் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் உறுதியாகக் கொண்டு அருணகிரிநாதர் பின்பற்றிப் பாடுவதைக் காணலாம்.

     தமிழ்க்கடவுள் முருகப்பெருமானே திருஞானசம்பந்தர் என்று ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர் முதலியோர் பாடுவது வெறும் சொல்லழகோ கருத்தழகோ மட்டுமல்ல. அக்கருத்திற்கு தக்கவரே திருஞானசம்பந்தர் என்றுணர்ந்தே அப்பெரியோர்கள் பாடியுள்ளனர். காரணம் திருஞானசம்பந்தர் செய்த தமிழ்ப்பணிகளை நன்குணர்ந்த பெருமக்கள் அவர்கள்.

 “மூல இலக்கிய முதல்வர்” என்று சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுவார். அத்தனை தமிழ் இலக்கிய வகைமைகளுக்கும் தமிழிசை வகைமைகளுக்கும் மூல முதல்வராக விளங்கியவர் திருஞானசம்பந்தர்.

     நாம் இன்று பல விழாக்களைக் கொண்டாடி வருகிறோம். அதற்கான ஆண்டு அட்டவனையும் நம்மிடம் உள்ளது. ஆனால் இலக்கியத்தில் முதன்முதலாக விழாக்களின் அட்டவனையைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர். மயிலாப்பூரில் அவர் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் “தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படும் விழாக்களை அந்தந்த மாதங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
 துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த் திகைநாள்
 தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
 விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

என்று நாம் கொண்டாடும் கார்த்திகை தீபத்திருவிழா குறித்த பதிவையும் அப்பதிகத்தில் அவர் அமைத்துள்ளார்.

     ஒன்பது கோள்களையும் வாரத்தின் ஏழு நாட்களையும் பெயர் வரிசையுடன் தரும் முதற்பதிவு திருஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். “ஆணை நமதே” என்று தன்மேல் ஆணையிட்டுப் பாடும் இலக்கிய மரபின் தோற்றுவாய் திருஞானசம்பந்தர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. மாலைமாற்று, சக்கரமாற்று, பல்பெயர்ப்பத்து, கூடற்சதுக்கம், கோமூத்திரி அந்தாதி, வழிமொழித் திருவிராகம், திருஇருக்குக்குறள், ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு என்று புதிய இலக்கிய வகைமைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.

     சைவ சமயத்தை பக்தி இயக்கமாகக் கட்டமைக்கும் தொடக்கால முயற்சியில் பெரும்பங்கு ஆற்றியவர்கள் காரைக்காலம்மையாரும் திருமூலரும் ஆவர். அவர்களுக்குப் பிறகு மக்கள் இயக்கமாக சைவத்தை சமூகத்தில் நிலைநிறுத்தியவர்கள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஆவர்.

     சைவ சமயத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று ‘நமசிவாய’ என்ற திருவைந்தெழுத்து மந்திரமாகும். சங்க இலக்கியங்களோ அற இலக்கியங்களோ முற்காலக் காப்பியங்களோ சிவபெருமானின் திருவைந்தெழுத்தை ஓதும் முறைமையைப் பதிவு செய்துள்ளதாக் ககுறிப்புகள் காணப்பெறவில்லை. திருமந்திரம் சிவபெருமானின் ஐந்தெழுத்துகளை வகைப்படுத்திப் பதிவுசெய்துள்ளது. ஆனால் ஓதும் முறைமையை திருஞானசம்பந்தர் தமது நமசிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். முதன்முதலாக அக்குமாலையாகிய உருத்திராட்சத்தை அங்கையில் கொண்டு திருவைந்தெழுத்தை ஓதும் முறைமையை இலக்கியத்தில் பதிவுசெய்தவர் திருஞானசம்பந்தரே ஆவார்.

“நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
 தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
 தக்க வானவ ராத்தகு விப்பது
 நக்கன் நாமம் நமச்சி வாயவே”

என்பது அவர்தம் பாடல்.

     இறைவன் எண்ணம், சொல், செயல்களுக்கு அப்பாற்பட்டவன்; அரிதற்கரியவன் என்று தத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆனால் திருஞானசம்பந்தரோ தமது முதற்பதிகத்திலேயே இறைவன் நமக்கு அணுக்கமானவன் என்று பதிவு செய்துள்ளார்.

“தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
 காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
 ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
 பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே”

     இப்பாடலின் இறுதியடியில் வரும் ‘இவன்’ என்னும் சொல் கவனிக்கத்தக்கது. இந்தியத் தத்துவ மரபில் முதன்முதலாக இறைவனை ‘இவன்’ என்று அண்மைச் சுட்டில் குறிப்பிட்டவர் திருஞானசம்பந்தர் ஆவார். 'இ' என்பது அண்மைச் சுட்டு. இறைவன் அடைய முடியாதவனல்ல; பக்தியுடன் அணுகினால் அவன் நமக்கு அணுக்கமானவனே என்னும் நம்பிக்கையை அவரது ‘இவன்’ என்னும் சொல் மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

(தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment