இதழ் - 85 இதழ் - ௮௫
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
நாள் : 10-12-2023 நாள் : ௧௦-௧௨-௨௦௨௩
புணர்ச்சி
எழுத்து புணர்ச்சி
- எழுத்து புணரும் வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல், மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்.
சான்று
- சிலை (ல்+ ஐ ) + அழகு - உயிரீறு
- பொன் + வளையல் - மெய்யீறு
- கிளி + அழகு - உயிர் முதல்
- வாழை + மரம் - மெய்ம்முதல்
மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து வரும்மொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.
சான்று
- கலை ( ல்+ ஐ) + அழகு - உயிர்முன் உயிர்
- பனி +( க் +ஆ )காற்று - மெய்முன் உயிர்
- கண் + அழகு - உயிர்முன் மெய்
- பவளம் +( வ் + ஆ )வாய் - மெய்முன் மெய்
உடம்படுமெய் புணர்ச்சி
உடம்படாத இரண்டு உயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங்கப்படும். உடன்படு என்ற சொல் உடம்படு என மருவி வழங்கியது.
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துக்களே நிற்பின், அச்சொற்கள் புணருங்கால் அவ்விரு உயிர்களும் தம்முள் உடம்படாது நிற்கும். அவற்றை உடம்படச் செய்வதற்கு அவற்றிடையே ஒரு மெய்யெழுத்துத் தோன்றும். அதனை உடம்படுமெய் என்பர். அவ்வாறு தோன்றும் மெய்கள் யகர(ய்) வகரங்களே(வ்) ஆகும்.
வருமொழி முதலில் ஏதேனும் ஓர் உயிரெழுத்து வர நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ நின்றால் யகரமும், இவை அல்லாத பிற உயிரெழுத்துகள் நின்றால் வகரமும், ஏ நின்றால் யகரம், வகரம் ஆகிய இரண்டுமே சொல்லுக்கு ஏற்ப வரும் என்று இலக்கண நூலான வீரசோழியம் கூறுகிறது. நன்னூலார் உயிர் முன் உயிர் புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய் வருவது பற்றி மூன்று விதிகளைக் கூறியுள்ளார்.
“ இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்”
- நன்னூல், நூற்பா. எண். 162
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment