இதழ் - 16 இதழ் - ௧௬
நாள் : 14-8-2022 நாள் : ௧௪-௮-௨௦௨௨
பழந்தமிழரின் வாழ்க்கைமுறை நால்வகை நில அமைப்பைக் கொண்டு அமைந்திருந்தது. நால்வகை நிலங்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். இந்நால்வகை நிலங்களைப் பகுப்பின் அடிப்படையில் மலையும் மலைசார்ந்த பகுதி குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடம் முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடம் மருதம் என்றும் கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என்றும் வரையறை செய்துள்ளனர். இந்நால்வகை நிலங்களைக் கொண்டுதான் நிலத்திற்கு ‘நானிலம்’ என்ற சொல் வழங்கப்படலாயிற்று. பாலை என்ற நிலப்பகுப்பு பிற்காலத்தில் சொல்லப்பட்டதாகும்.
குறிஞ்சி நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
குறிஞ்சி நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
தமிழ் இலக்கிய மரபில் ஓங்கி உயந்த நிலப்பகுதியை மலை என்று குறிப்பா். மலையில் குறைந்தது குன்று என்றும், குன்றிலும் குறைந்தது பாறை என்றும், அறை என்றும், கல் என்றும் வழங்கி வந்தனா். ஆகவே குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த பகுதி என்று முன்னமே குறிப்பிட்டோம். எனவே மலை, கோடு, குன்று, பாறை, அறை, கல், கிரி, அசலம், சைலம், அத்திரி, குறிச்சி என்னும் சொற்கள் குறிக்கும் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் குறிஞ்சி நில ஊர்கள் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மலை
திருமலை (திருப்பதி, வடமலை), ஆனைமலை, பசுமலை, சிறுமலை, பரங்கிமலை, பாலமலை, பொன்மலை, பழனிமலை, சுவாமிமலை, தணிகைமலை, உடுமலை, சிவன்மலை
கோடு
மலையின் உச்சியை கோடு என்னும் சொல் குறிக்கிறது. திருச்செங்கோடு, விழவங்கோடு, கோழிக்கோடு
குன்று
குன்றின் பெயரால் வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களாவன : குமரன்குன்று, திருப்பறங்குன்றம், திருக்கழுக்குன்றம், நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம், குன்றூர், குன்றத்தூர், குன்னத்தூர், குன்னூர், குன்றக்குடி
பாறை
பாறை என்னும் சொல்லுடைய ஊர்ப்பெயர்கள் பூம்பாறை, சிப்பிப்பாறை, தட்டைப்பாறை, குட்டைப்பாறை, வழுக்குப்பாறை, வால்பாறை,
அறை
வைணவர்கள் போற்றும் திருவெள்ளறை (சுவேதகிரி)
கல்
திண்டுக்கல், நாமக்கல் (ஆரைக்கால்), திருமருகல், கோட்டக்கல்
கிரி
சிவகிரி, புவனகிரி, நீலகிரி, சங்ககிரி, ஏலகிரி, கோத்தகிரி, நாமகிரி
அசலம், சைலம்
விருத்தாச்சலம், ஸ்ரீசைலம், சிவசைலம்
அத்திரி
வனமாமலை என்னும் நாங்குனேரிக்கு தோத்தாத்திரி
குறிச்சி
ஆழ்வார்குறிச்சி, கள்ளக்குறிச்சி, பிராமணக்குறிச்சி, பாளையங்குறிச்சி
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . .
. )
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment