பக்கங்கள்

தேவார மொழி

இதழ் - 190                                                                                                        இதழ் - ௧0
நாள்  :  08 / 02 / 2026                                                                                  நாள்   :   0 / 0 / ௨௦௨



தோடுடைய செவியன் - 6

     உமையம்மையூட்டிய ஞானப்பாலுண்டு உவமையிலாக் கலைஞானம் யாவும் வாய்க்கப்பெற்ற திருஞானசம்பந்தர் சிவபெருமானின் இடக்காதணியான தோட்டை முதலிற்குறித்து தனது முதற்பதிகத்தை ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்கினார். மற்றொரு காதில் குழை காணப்படும். இந்தத் தோடும் குழையும் குறித்த ஒரு புராணச்செய்தியுண்டு. சிற்றிலக்கியங்கள் சில அதனைப் பதிவுசெய்துள்ளன. முதலில் அந்த புராணச் செய்தி என்னவென்று அறிந்துகொள்ளலாம்.

    சிவபுராணத்தில் கந்தர்வர்கள் இருவர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவர்கள் அசுவதரன், கம்பளன் என்போர். கந்தர்வர்கள் இயல்பிலேயே ஆழ்ந்த இசைஞானம் உடையவர்கள். இவர்கள் இருவரும் சிறப்பாக கலைமகளின் அருள்பெற்றவர்கள். ஆகவே கூடுதல் இசைவன்மை வாய்த்தவர்களாக இருந்தனர். இசையின் ஆயபயன் வாலறிவன் நற்றாள் தொழுதுய்வதுதான் என்னும் அறிவு வாய்க்கப்பெற்றவர்கள். எனவே சிவபெருமானின் அருள் வேண்டி தவமியற்ற முயன்றனர். 

     தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று திருப்பாதிரிப்புலியூர் என்பது. இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பாதிரி மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையாலும் நாம் முன்பு கண்ட வியாக்கரபாதர் (புலிக்கால் முனிவர்) வழிபட்டு உய்ந்த காரணத்தினாலும் இத்தலம் பாதிரிப்புலியூர் என்று பெயர்பெற்றது. அங்குள்ள இறைவனுக்கு பாடலீசுவரர் என்று பெயர். பாடலம் என்ற வடமொழிச் சொல் பாதிரி மரத்தைக் குறிக்கும். புலிக்கால் வடிவினரான வியாக்கரபாதர் வழிபட்ட ஐந்து தலங்கள் ‘பஞ்சபுலியூர்’ என்றழைக்கப்படுகிறது. அவை பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டினம்), திருஓமாம்புலியூர், திருச்சிறுபுலியூர் என்பன.

    பஞ்சபுலியூர்களுள் ஒன்றான பாதிரிப்புலியூரை மாபெரும் இசைஞானிகளான அசுவதரனும் கம்பளனும் அடைந்தனர். இறைவனே இசைவடிவினனாக இருக்கிறான் என்பதை உணர்ந்த அவர்கள் அங்கு தங்கியிருந்து இறைவனை இசையால் போற்றிப் பழிச்சுவதையே தங்கள் தவமாகக் கொண்டனர். அவர்களுடைய தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவர்களுக்கு காட்சியளித்து வேண்டுவன கேட்குமாறு பணித்தார். “ஐயனே! நாங்கள் பாடும் இசையை என்றும் தாங்கள் செவியேற்று அருளவேண்டும். அதுவே நாங்கள் வேண்டுவது” என்றனர்.

    இறைவனும் மிக மகிழ்ந்து அவர்களை தனது செவிகளில் அணிகளாக ஏற்றார். இறைவனின் செவிகளில் தோடாகவும் குழையாகவும் இருந்து என்றும் அவரது செவிகளில் இசையமுது வழங்கி மகிழும் பேற்றைப் பெற்றனர். “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை” என்று திருநாவுக்கரசரின் திருக்கடம்பந்துறைப் பதிகப்பாடல் இதனைக் காட்டுகிறது. இங்ஙனம் அசுவதரன், கம்பளன் என்னும் இரு கந்தர்வர்களும் இறைவனின் திருச்செவிகளில் அணிகளாயினர் என்பது புராணம்.

    தொல்காப்பிய தேவர் என்பவர் திருப்பாதிரிப்புலியூர் மீது கலம்பக நூலொன்று இயற்றியுள்ளார். திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் என்று பெயர். அதில் அசுவதரனும் கம்பளனும் இறைவனின் திருச்சொவிகளில் இசைவழங்கும் பேறுபெற்றதைக் குறித்து அதில் பாடியுள்ளார்.

    “பாடுவார் பாடும் பரிசில் வரிசையெல்லா
     மாடுவா ரன்றி யயலா ரறிவாரோ
     தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர்
     பாடுவா ரோரிருவர்க் கிட்ட படைவீடே” (பா. 96)
என்பது அவர்தம் பாடல்.

     இதில் வரும் ‘பாடுவார் ஓரிருவர்’ என்றும் சொல் அசுவதரன், கம்பளன் ஆகியோரைக் குறிக்கும். “கந்தர்வர்கள் இருவரின் இசைப்பாடலைக் கேட்டு மகிழும் தோன்றாத்துணை நாதரே எனது பாடலையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பதே மேற்கண்ட பாடலின் மையக்கருத்தாகும்.  

 கலம்பக வல்லுநர்களான இரட்டைப்புலவர்களும் தில்லைக்கலம்பகத்தில் கூத்தனின் திருச்செவியைச் சொல்லுமிடத்தில் இவர்களைக் குறித்துள்ளனர். அவர்களின் பாடல் பின்வருமாறு:

     “ காதில் இரண்டு பேர் கண்டோர் இரண்டு பேர்
      ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்  - பேதைமுலை 
      உண்ணார் இரண்டு பேர் ஓங்கு புலியூரர்க்கு
      பெண்ணான பேர் இரண்டு பேர் ”

    ‘காதில் இரண்டு பேர்’ என்று இரட்டையர் குறிப்பிடுவது அசுவதரன், கம்பளன் ஆகியோரையே ஆகும். 

    தோடுடைய செவியன் என்ற திருஞானசம்பந்தரின் முதற்பதிகத்தின் முதற்சொல்லை விளங்கிக் கொள்வதற்கு அவரது செவிகளில் அணிகளாக விளங்கும் அசுவதரன், கம்பளன் என்னும் கந்தர்வர்கள் இருவரைக் குறித்து அறிந்திருப்பது பெருந்துணை புரியும். இறைவனை நல்லிசைத்தமிழால் பாடி வழிபடுவது தொல்வினைகளை எளிதில் தீர்க்கும் என்பது திருநெறிய தமிழ்வல்லவரான திருஞானசம்பந்தரின் ஆணை. இதனை அவரது முதற்பதிகத்தின் முதற்சொல்லும் கடைக்காப்பும் உறுதிசெய்கின்றன.

தோடுடைய செவியன் நிறைவுற்றது.

தேவார மொழி அறிவோம்…

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment